காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்பாரா ராகுல்?

காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்பாரா ராகுல்?

மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகிவரும் நிலையில், இன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 17-ல் நடைபெறும் என அறிவித்திருக்கிறது. இந்த சூழலில், தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய யார் யாரெல்லாம் முன்வருவார்கள் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

அதைவிட முக்கியமாக கட்சித் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்க ராகுல் காந்தி சம்மதிப்பாரா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. குறிப்பாக, சல்மான் குர்ஷித், அசோக் கெலாட் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் என விரும்புவதால், ராகுல் என்ன முடிவெடுப்பார் எனும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அதன் பின்னர் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருந்துவருகிறார். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை என வலியுறுத்தி ஜி-23 தலைவர்கள் பகிரங்கக் கடிதம் எழுதியதால் அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, அந்தப் பதவியிலிருந்து விலக முன்வந்தார். ஆனால், அவர் அப்பதவியில் தொடர வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியதால் கட்சியின் இடைக்காலத் தலைவராக அவர் தொடர்ந்து நீடிக்கிறார்.

இந்நிலையில், கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் எனும் குரல் காங்கிரஸுக்குள் பரவலாக ஒலித்துவருகிறது. கூடவே, ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் என்று பல முக்கியத் தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

தற்போது கட்சித் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தி அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இன்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவரும் காங்கிரஸ் செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளருமான சல்மான் குர்ஷித் கட்சித் தலைவர் பதவிக்கு நம்பர் ஒன் தெரிவாகவும், ஒரே தெரிவாகவும் ராகுல் காந்திதான் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக சோனியா காந்தி வெளிநாடு சென்றிருக்கிறார். அவருடன் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் ராகுல் இந்தியா திரும்பியதும் இதுகுறித்து அவரிடம் வலியுறுத்தப்படும் என சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே தலைவர் ராகுல்தான் என்று கூறியிருக்கும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் இதே கருத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மேலும் பேசிய சல்மான் குர்ஷித், “வெளிப்படையாகச் சொன்னால், நான் இதுவரை பேசிய அனைவரும் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பலர் கருதுவதையும் நான் உணர்ந்திருக்கிறேன். எனினும், அதைத் தாண்டி இதுதொடர்பாக நாங்கள் இன்னமும் விவாதிக்கவில்லை. அவர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா என்றும் எங்களுக்கு எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை. இன்று தேர்தல் தேதி அறிவிக்கும் கூட்டம் எனபதால் இதுகுறித்துப் பேசவும் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்றார்.

ஆனால், கட்சித் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்கப்போவதில்லை என்று ராகுல் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாகவே காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் இந்தியா திரும்பியதும் என்ன நிலைப்பாடு எடுப்பார் எனத் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in