குஜராத் முதல்வர் வேட்பாளராக ராகவ் சட்டா: ஆம் ஆத்மி கட்சியின் வியூகம் என்ன?

குஜராத் முதல்வர் வேட்பாளராக ராகவ் சட்டா: ஆம் ஆத்மி கட்சியின் வியூகம் என்ன?

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்து மும்முரமாக இயங்கிவரும் ஆம் ஆத்மி கட்சி, இளம் தலைவர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த திட்டமிடுகிறது. அது அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சட்டா என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதன் பின்னணி என்ன?

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரை அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிறுத்துவார் எனும் கேள்வி எழுந்தது. முதல்வர் வேட்பாளர் குறித்து பஞ்சாப் மக்கள் அலைபேசி மூலம் தங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று கூறி அதற்கான எண்ணையும் வெளியிட்டார் கேஜ்ரிவால். எனினும், முதல்வர் வேட்பாளராக ஒரு சீக்கியர்தான் முன்னிறுத்தப்படுவார் எனக் கேஜ்ரிவால் முன்பே தெரிவித்திருந்தார். குறிப்பாக, பகவந்த் மான் குறித்து அவ்வப்போது அவர் தெரிவித்த பாராட்டுரைகள் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதற்குக் கட்டியம் கூறின. எதிர்பார்த்தது போலவே, பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரே அந்தத் தேர்தலில் வென்று பஞ்சாப் முதல்வரானார்.

கிட்டத்தட்ட அதே அணுகுமுறையைத்தான் குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி கடைப்பிடிக்கும் எனத் தெரிகிறது.

அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். எனினும், டெல்லி தேர்தலிலும் பஞ்சாப் தேர்தலிலும் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர் எனும் முறையில், குஜராத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கேஜ்ரிவால் விரும்புகிறார் என்கிறார்கள். பகவந்த் மானைப் போலவே இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார் ராகவ் சட்டா. அவர் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் அவருக்குப் பல்வேறு பொறுப்புகளை அளித்துவந்திருக்கிறார். எனவே, குஜராத்தின் முதல்வர் முகமாக ராகவ் சட்டா விரைவில் முன்னிறுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

2017 குஜராத் தேர்தலில், மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 99 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. எனினும் கணிசமான இடங்களைக் காங்கிரஸிடம் இழந்தது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்றது. இந்த முறை பாஜக, காங்கிரஸ் என இரண்டு பிரதான கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கையுடன் பேசிவருகிறது. எனினும், 2017 தேர்தலில் அக்கட்சி ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in