வடக்கு கர்நாடகா தனி மாநிலமாக பிரிக்கப்படுமா?: பாஜக அமைச்சரின் கருத்தால் சலசலப்பு

வடக்கு கர்நாடகா தனி மாநிலமாக பிரிக்கப்படுமா?: பாஜக அமைச்சரின் கருத்தால் சலசலப்பு

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வடக்கு கர்நாடகா தனி மாநிலமாக மாறும் என்று கர்நாடக மாநில அமைச்சர் உமேஷ் கட்டி கூறியது கர்நாடக மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி, " கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரு தெற்கு கர்நாடக மக்களுக்கு மட்டுமே மையமான இடமாக உள்ளது. வட கர்நாடகாவில் உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள், அதனால்தான் எங்களுக்கு தனி மாநிலம் தேவை, அது எங்கள் நிகழ்ச்சி நிரல். 2024 தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவை இரண்டாகப் பிரிப்பார். மகாராஷ்ட்டிரா மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களும் பிரிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

உமேஷ் கட்டியின் இந்த கருத்துக்கள் கர்நாடக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, " கர்நாடகாவை பிரிக்க பிரதமர் நரேந்திர மோடி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான செய்தியாகும், இதுகுறித்து பிரதமர் மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளிக்கவேண்டும். இது தொடர்பாக அரசு மட்டத்தில் விவாதம் நடக்கவில்லை என்றால் உமேஷ் கட்டி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்க மாட்டார். ஒருவேளை உமேஷ் கட்டி கூறியதில் உண்மை இல்லை என்றால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மாநிலத்தைப் பிரிப்பது என்பது மாநிலத்தை ஒன்றிணைக்கப் போராடியவர்களுக்கு செய்யும் துரோகம். மாநிலத்தை பிரிப்பது என்பது தாயை, தாய்நிலத்தை, தாய்மொழியை பிரிப்பதற்கு சமம்" என தெரிவித்தார்

கர்நாடகா பிரிவினை குறித்த அமைச்சரின் கருத்து பெரும் சலசலப்பை உருவாக்கியதால், இதுபற்றி புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "வட கர்நாடகாவை தனி மாநிலமாக உருவாக்க அரசு மட்டத்தில் எந்த சிந்தனையும், முன்மொழிவும் இல்லை. கர்நாடகாவை பிரிக்க வேண்டும் என உமேஷ் கட்டி பேசுவது முதல் முறையல்ல. பல ஆண்டுகளாக கூறி வருகிறார். அவரே இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in