அயோத்தி கோயிலில் புதிய ராமர் சிலை நிறுவப்படும் என அறிவிப்பு: இத்தனை அடி உயரமா?

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோயிலின் கருவறையில் ஒன்பது அடி உயரத்தில் புதிய ராமர் சிலை நிறுவப்படும் என்றும், அதனை செய்வதற்கு சிற்பிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

1949-ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23- ம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாபர் மசூதியின் மைய குவிமாடத்தில் நிறுவப்பட்ட குழந்தை ராமரின் சிலை, புதிய கோயிலில் நிறுவப்படாது என்று ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய சம்பத் ராய், "ராமரின் புதிய சிலை தயாரிப்பது தொடர்பாக மூத்த துறவிகளுடன் கலந்துரையாடுவோம். கர்நாடகா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து கற்களை சிலைக்காக தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த சிலை கருவறையில் 9 அடி உயரத்தில் சூரியனின் கதிர்கள் ராமரின் நெற்றியைத் தொடும் கோணத்தில் நிறுவப்படும். இதற்காக சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ மற்றும் ம்த்திய வானியல் மற்றும் வானியல் இயற்பியல் நிபுணர்கள் குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். இதன்படி சூரியனின் கதிர்கள் சிலையின் நெற்றியைத் தொடும் வகையில் சிலையை நிறுவ வேண்டும். இருப்பினும், சிலையின் சரியான தோற்றம் மற்றும் வெளிப்பாடுகள் மற்றும் முக அமைப்பு முடிவு செய்யப்படவில்லை

2024-ம் ஆண்டு மகர சங்கராந்தி (ஜனவரி 14) அன்று கோயிலின் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும். 2023ம் ஆண்டு இறுதிக்குள், கருவறையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

ஒடிசாவைச் சேர்ந்த சிற்பிகள் சுதர்சன் சாஹு மற்றும் வாசுதேவ் காமத், கர்நாடகாவைச் சேர்ந்த கே.கே.வி.மணியா மற்றும் புனேவைச் சேர்ந்த ஷத்ரயக்யா டீல்கர் ஆகியோர் இறுதித் தேர்வுக்கு சிலைகளின் மாதிரியை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

70 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 9, 2019 அன்று உச்ச நீதிமன்றம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5, 2020 அன்று கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை செய்யப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் 2024 ஜனவரி 1-ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை அறிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in