‘கதி சக்தி’ எனும் மெகா திட்டம்: கனவை நனவாக்குவாரா மோடி?

‘கதி சக்தி’ எனும் மெகா திட்டம்:
கனவை நனவாக்குவாரா மோடி?

தேசியப் பெருந்திட்டமாக ‘கதி சக்தி’ எனும் திட்டத்தை, அக்டோபர் 13-ல் தொடங்கிவைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. வெவ்வேறு துறைகள், தொழில் பிரிவுகள், நிறுவனங்கள் தொடங்கி நடத்தும் ரூ.110 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தேசிய அளவில் ஒருங்கிணைத்து அவற்றில் தடங்கல்கள், பிரச்சினைகள், தாமதங்கள் ஏற்பட்டால் அடையாளம் கண்டு, விரைந்து தீர்த்துவைத்து உற்பத்தியைப் பெருக்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இதைச் செய்வதற்கு வசதியாக இப்போது தகவல் தொழில்நுட்பம் பெருமளவுக்கு முன்னேறியிருக்கிறது. ஒரே சமயத்தில் ஒரே துறைக்காக நாட்டின் வெவ்வேறு இடங்களில் அமலாகும் திட்டங்களையும், ஒரே இடத்தில் வெவ்வேறு பணிகளுக்காக நடைபெறும் திட்டங்களையும், இனி ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கலாம். ஒரு துறை அல்லது தொழில் பிரிவுக்குத் தேவைப்படும் உதவியை, வழிகாட்டலை இன்னொரு துறை மூலம் மேற்கொள்ளச் செய்து விரைந்து செயல்பட வைக்கலாம். ‘கதி சக்தி’ திட்டம் குறித்து, இப்படி நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.

16 அரசுத் துறைகள்

மத்திய அரசின் ரயில் துறை, போக்குவரத்து - நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் – நிலவாயு, எரிசக்தி, கப்பல், விமானப் போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற 16 முக்கிய அடித்தளக் கட்டமைப்புத் துறைகள் இந்தப் பெருந்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். ஒரு திட்டத்தை நிறைவேற்ற வெவ்வேறு கட்டங்களுக்கு வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் பெறுவது, தடையில்லாச் சான்று பெறுவது அவசியம். இதன் காரணமாகவே பல திட்டங்கள் ஆங்காங்கே தடுமாறி நின்றுவிடுகின்றன. உயர் அதிகாரிகளுடைய நேரடிக் கண்காணிப்பு, ஒருங்கிணைப்பில் இந்தத் தடைகள் விலகி, திட்டம் வேகமாகவும் இலக்கின்படியும் பூர்த்தியாகும். இதனால் திட்டச் செலவுகள் தேவையில்லாமல் உயர்வது தவிர்க்கப்படும். மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் பலன் அளித்ததைப்போல, இந்தத் திட்டமும் பலன் தரவல்லது என்றே நிபுணர்கள் வரவேற்கின்றனர்.

கதி சக்தியானது, மத்திய அரசின் துறைகள் மட்டுமல்ல, மாநில அரசுகளையும் திட்ட அமலில் ஒருங்கிணைக்க வைக்கிறது.

மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் நடப்புத் திட்டங்களும், திட்டமிட்டுள்ள எதிர்காலத் திட்டங்களும் ஒரே மைய தகவல் களத்தில் இணைக்கப்பட்டு அனைவராலும் பார்க்கப்படும். இதனால், ஒவ்வொரு துறையும் தங்களால் செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கு முன்னுரிமை தந்து திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உதவ முடியும்.

திடீரென்று ஏன் இந்தத் திட்டம்?

பெரிய அளவில் அரசு திட்டங்களை வகுத்தாலும், ஆங்காங்கே நுண்ணிய அளவில் அவற்றை அமல் செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அடுத்து என்ன தேவைப்படும் என்பது குறித்து முன்கூட்டிய தகவல் இல்லாததாலும், அவரவர் அவரவருடைய எல்லைக்குள் இருந்தபடி செயல்படுவதால் ஒத்துழைப்பும் ஒட்டுமொத்தப் பார்வையும் இல்லாமல் திட்டம் தொய்வடைகிறது, நாளடைவில் தோல்வியையும் சந்திக்கிறது. அரசின் நிதியாதாரங்களும் வீணாகின்றன. இதைத் தடுக்கத்தான் ‘கதி சக்தி’ என்று பிரதமர் மோடி விளக்கினார். இதற்கு ஓர் உதாரணத்தையும் அவர் கூறினார். அரசின் சாலைத் துறை நல்ல தரத்தில் சாலையை அமைக்கிறது. சில நாட்கள் கழித்து, குடிநீர்க் குழாய்களைப் பதிப்பதற்காக இன்னொரு துறை அந்தப் புதிய சாலையைத் தோண்டிவிடுகிறது. ஒருங்கிணைப்பு இல்லாததால் இப்படி நிதி விரயமும், நேர விரயமும், இழப்பும் ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

கதி சக்தியானது மத்திய அரசின் துறைகள் மட்டுமல்ல, மாநில அரசுகளையும் திட்ட அமலில் ஒருங்கிணைக்க வைக்கிறது. பாரத்மாலா, சாகர்மாலா, உடான், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, உலர் – நில துறைமுகங்கள் நிறுவுவது உள்ளிட்ட பெருந்திட்டங்கள் கதி சக்தி மூலம் நிறைவேற்றப்படும்.

2024-25-க்கான திட்டங்கள்

நாட்டின் 11 இடங்களில், 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவத்துக்குத் தேவைப்படும் வாகனங்கள், ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படும். இவை தரைப் படை, கடற்படை, விமானப் படைகளுக்கானவை. 38 இடங்களில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு மேற்கொள்ளப்படும். 109 இடங்களில் மருந்து – மாத்திரைகள், தடுப்பூசிகள், மருத்துவக் கருவிகள் தயாரிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை – தரைவழி போக்குவரத்துத் துறை 2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்குப் புதிய சாலைகளை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 4 வழி அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளைப் போட்டு முடிப்பது, கடலோரத்தில் 5,590 கிலோமீட்டருக்குச் சாலைகளை அமைப்பது, நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் அனைத்துத் தலைநகரங்களையும் தேசிய நெடுஞ்சாலை மூலம் நேரடியாக இணைப்பது ஆகியவை இலக்குகளாகும்.

ரயில்வே துறை 2020-ல் 12,100 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டது. இதை 2024-25-ல் 16,000 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் ரயில் பாதைகளை அமைப்பதன் மூலமும் சரக்குப் போக்குவரத்துக்காக மட்டுமே தனியாக 2 பாதைகளை அமைப்பதன் மூலமும், சரக்குகளைக் கொண்டு செல்வதில் ஏற்படும் நெரிசலை 51 சதவீதம் குறைத்துவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

விமானப் போக்குவரத்தை அதிகப்படுத்த 2025-க்குள், 109 விமான நிலையங்களைப் புதிதாக ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அவை மட்டுமின்றி ஹெலிகாப்டர் இறங்குதளங்கள், ஆறு மற்றும் கடலில் விமானங்கள் இறங்க தளங்கள் போன்றவையும் அமைக்கப்படும். கப்பல்கள் மூலம் கடந்த ஆண்டு கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 12,820 லட்சம் மெட்ரிக் டன். அதை 17,590 லட்சம் மெட்ரிக் டன்னாக 2024-25-ல் உயர்த்துவதும் இத்திட்டத்தின் இலக்கு.

நிலம் வழியே எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய்கள் இப்போது 17,000 கிலோமீட்டர் நீளத்துக்கு உள்ளன. அதை 2024-25-ல் இரட்டிப்பாக்கி 34,500 கிலோமீட்டர் நீளமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, சிறிய, நடுத்தர தொழில் துறைகளுக்கும் நிறைய வேலைகளையும் வருமானத்தையும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை பலிக்கட்டும்

எப்போதுமே அரசுகள் கொண்டுவரும் திட்டங்களில் பல்வேறு நோக்கங்கள் இருக்கும். உதாரணத்துக்கு, போக்குவரத்துத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் அந்தத் துறைக்கு மட்டுமல்லாமல் பிற துறைகளுக்கும் பொருளாதாரப் பெருக்கல் விளைவுகளை ஏற்படுத்தவல்லவை. ஒரு ஊருக்குப் பேருந்து வசதி செய்து தருவதால், அந்த ஊரில் உள்ளவர்கள் நல்ல கல்வி நிலையங்களுக்குச் சென்று படிக்க முடியும், அருகில் உள்ள நல்ல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும், வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்க முடியும், விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய இடு பொருட்களை எளிதாக வாங்கிக்கொண்டு, விளைபொருட்களை விற்க முடியும். கிராமங்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி, தகவல் தொடர்பு வசதிகள் கிடைக்கும். இதனால்தான் அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

பொதுவாகவே, பெரிய அளவிலான திட்டங்கள் அறிவிக்கப்படும்போது மக்களிடையே பெரும் நம்பிக்கை எழும். அவை செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், அந்த நம்பிக்கை மெல்ல மெல்ல சரியத் தொடங்கிவிடும். அப்படியெல்லாம் நடப்பதைத் தவிர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருக்கும் கதி சக்தி திட்டத்துக்கு, அந்த கதி நேராது என்று நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in