‘இனி கவனமாக இருப்போம்’ - மாற்றுத்திறனாளிச் சிறுவனுக்கு அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

ராஞ்சி விமான நிலைய சம்பவத்தின்போது சக பயணி மணீஷா குப்தா எடுத்த புகைப்படம்
ராஞ்சி விமான நிலைய சம்பவத்தின்போது சக பயணி மணீஷா குப்தா எடுத்த புகைப்படம்ஃபேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்டது

மாற்றுத்திறனாளிச் சிறுவனை விமானத்தில் ஏற்றிக்கொள்ள மறுத்த விவகாரத்தில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட இண்டிகோ விமான நிறுவனம், இதுபோன்ற தருணங்களில் எப்படிச் செயல்படுவது என்பது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

மே 7-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகர விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் ஏற ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன், தாய், தந்தை அடங்கிய ஒரு குடும்பம் காத்திருந்தது. எனினும், அந்தச் சிறுவன் சக பயணிகளின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி விமானத்தில் ஏற அக்குடும்பத்தினரை அனுமதிக்க இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த சக பயணிகள் அச்சிறுவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். எந்த விமான நிறுவனமும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் உள்ளிட்ட தகவல்களைத் தங்கள் செல்போன்கள் மூலம் இணையத்தில் தேடி, இண்டிகோ நிறுவன அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். அந்தக் காட்சிகளை அங்கிருந்த பயணிகள் சமூகவலைதளங்களில் காணொலியாக வெளியிட்டனர்.

எனினும் இண்டிகோ நிறுவனத்தினர் இறுதிவரை அக்குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கவில்லை. மாறாக, ஓர் ஓட்டலில் அவர்களைத் தங்கவைத்து மறுநாள் வேறொரு விமானத்தில் அவர்களை அனுப்பிவைத்தது அந்நிறுவனம். இதனால், அக்குடும்பம் ராஞ்சியிலிருந்து ஹைதராபாத் செல்ல ஒரு நாள் தாமதமானது.

இச்சம்பவம் குறித்து பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், ‘இப்படியான நடத்தையைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. எந்த ஒரு மனிதருக்கும் இப்படியான நிலை ஏற்படக் கூடாது. இந்த விவகாரம் குறித்து நானே தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துகிறேன்’ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ட்வீட் செய்தார். இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்தச் சிறுவன் பதற்றமான மனநிலையில் இருந்ததாக மே 9-ல் அளித்த விளக்கத்தில் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில், இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் இண்டிகோ நிறுவனத்துக்கு டிஜிசிஏ 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அத்துடன், இண்டிகோ நிறுவனத்துக்குச் சில அறிவுறுத்தல்களையும் முன்வைத்தது.

இந்நிலையில், உடல் குறைபாடுகளைக் கொண்டவர்கள், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் போன்றோரை எப்படிக் கையாள்வது, குறிப்பாக அவர்கள் பதற்றமான சூழலில் இருக்கும்போது அவர்களை எப்படி நடத்துவது என்பன உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்படும் என்று இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், டிஜிசிஏ விதித்த அபராதத்துக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று அவர் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்திய டிஜிசிஏ முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஒவ்வொன்றாக அமல்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பதற்றமான நிலையில் இருக்கும் பயணியை அமைதிப்படுத்துவது குறித்து இண்டிகோ சார்பில் பிரத்யேகமாக ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக 100 பயிற்சி நிபுணர்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை (மே 28) இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட டிஜிசிஏ, சம்பவம் நடந்த அன்று மாற்றுத்திறனாளி சிறுவனைக் கையாள்வதில் இண்டிகோ பணியாளர்கள் போதுமான கவனத்துடன் நடந்துகொள்ளவில்லை என்றும் நிலைமையை மோசமாக்கும் விதத்தில் நடந்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது. பரிவுடன் கையாண்டிருந்தால் அந்தச் சிறுவனை சாந்தப்படுத்தியிருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற தருணங்களில் கூருணர்வுடன் செயல்பட இண்டிகோ பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது.

விமான நிறுவனங்கள் இதுபோன்ற சூழல்களைச் சரியாகக் கையாள, தங்கள் சொந்த விதிமுறைகளை மீண்டும் படித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஒரு பயணியை விமானத்தில் ஏற்ற மறுக்கும் சூழல் எழுந்தால், அதற்காக விமான நிலைய மருத்துவரிடம் எழுத்துபூர்வமாக அனுமதி பெற வேண்டும் என்றும், குறிப்பிட்ட பயணியை விமானத்தில் அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட விமானியிடமும் எழுத்துபூர்வமாக அனுமதி வாங்க வேண்டும் என்றும் டிஜிசிஏ சுட்டிக்காட்டியிருக்கிறது.

ராஞ்சி விமான நிலையச் சம்பவத்தின்போது, அதே விமானத்தில் பயணிக்கவிருந்த மருத்துவர்கள் சிலர், மாற்றுத்திறனாளிச் சிறுவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், இண்டிகோ நிறுவன அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in