இந்த நூற்றாண்டிலும் பில்லி, சூனியத்தை நம்பி நரபலியா?: உயர் நீதிமன்ற நீதிபதி கவலை

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் இந்த நூற்றாண்டிலும் பில்லி, சூனியத்தை நம்பி நரபலியா?: உயர் நீதிமன்ற நீதிபதி கவலை

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பதாக முறையிட்ட  போபால் பெண்ணுக்கு உரிய  பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான  ஷாலினி சர்மா என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர் என தன்னை குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூடநம்பிக்கைகளிலும் அதிக  நம்பிக்கை கொண்டவர் எனவும், தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீஸில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்.17-ம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள். 

அப்படி அழைத்துச் சென்றால்  தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில்  கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் ஷாலினி சர்மா ஆஜராகி தனக்கு பாதுகாப்பு வழங்கிய தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். பின்னர் நீதிபதி, இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பெண்ணுக்கும், அவருக்கு உதவிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். நரபலி தொடர்பாக ஷாலினி புகார் அளித்த விவகாரத்தில் போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in