ஆஃப்ஸ்பா சட்டத்துக்கு முடிவுரை எழுதப்படுமா?

ஆஃப்ஸ்பா சட்டத்துக்கு முடிவுரை எழுதப்படுமா?

நாகாலாந்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில், 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஆஃப்ஸ்பா) ரத்துசெய்ய வேண்டும் எனும் குரல்கள் வட கிழக்கு மாநிலங்களில் பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. அசாம் ரைபிள் படையினரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அம்மாநிலங்கள் கோரியிருக்கின்றன.

இந்தச் சம்பவத்துக்கு நாடாளுமன்றத்தில் உள் துறை அமைச்சர் நேற்று (டிச.6) வருத்தம் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனும் கோரிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர். ஏற்கெனவே இந்தச் சட்டம் குறித்து கடும் அதிருப்தியில் இருக்கும் வட கிழக்கு மாநில அரசுகள் இவ்விஷயத்தில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதவிருக்கிறது நாகாலாந்து அரசு.

மோன் மாவட்டத்தில், ராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகாலாந்து முதல்வர் நெபியூ ரியோ, இந்தச் சட்டம் இந்தியாவின் பிம்பத்தின் மீது விழுந்திருக்கும் கரும்புள்ளி என்று கூறியிருக்கிறார். “இந்தச் சட்டம், எந்த முன்னறிவிப்பும் இன்றி பொதுமக்களைக் கைதுசெய்யவும், வீடுகளில் சோதனையிடவும், மக்களைக் கொல்லவும் ராணுவத்துக்கு அதிகாரமளிக்கிறது. ஆனால், பாதுகாப்புப் படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தச் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை இப்பகுதிகளில் வசிப்பவர்கள் கோர முடியாது. ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ள எந்தப் பொருளை ஒருவர் கொண்டுவந்தாலும் அவரைச் சுட்டுக்கொல்ல ராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் அளவுக்கு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்ற பாதுகாப்புப் படையினர் யாரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில்லை என்பதால், இந்தச் சட்டம் அமலில் இருக்கும் வட கிழக்கு மாநில மக்கள், அரசுகள், கிளர்ச்சிக் குழுக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இன்றுவரை காஷ்மீர், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கிறது. திரிபுராவில் இச்சட்டம் 2015-ல் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அசாமில் 2021 செப்டம்பர் மாதம், மாநிலம் முழுவதும் ‘பதற்றம் நிறைந்த பகுதி’ என அறிவிக்கப்பட்டு, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. 2018-ல் மேகாலயாவில் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. நாகாலாந்தில் இதே பதத்தை முன்வைத்து இந்தச் சட்டம், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருகிறது. 2021 மார்ச் மாதம் அருணசாசலப் பிரதேசத்தின் 3 மாவட்டங்களிலும் இச்சட்டம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நீட்டிப்பு தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் அங்குள்ள மக்களுக்குப் பிரச்சினையாகியிருக்கிறது.

மறுபுறம் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தச் சட்டம் தொடர வேண்டும் என அரசு கருதுகிறது. இந்த வாதத்துக்கு, சமீபத்திய சில காரணிகள் வலு சேர்க்கின்றன. அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் புகலிடம் தேடி எல்லை தாண்டி, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகிறார்கள். அதேபோல்,கடந்த மாதம் மணிப்பூரில், அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் கமாண்டர் கர்னல் விப்லவ் திரிபாதி, அவரது மனைவி, மகன் ஆகியோருடன் 4 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கைகள் எடுப்பதில் ராணுவத்தினர் தீவிரமாக இருப்பதாகவும், அதில் காட்டிய அவசரம்தான் அடையாளம் தெரியாமல் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு ராணுவத்தினரைக் கொண்டுசென்றுவிட்டதாகவும் வாதிடப்படுகிறது.

1958-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் வேர்கள், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துடன் இணைந்து ஜப்பான் படைகள் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லின்லித்கோ பிரபு ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தார். நாடு சுதந்திரமடைந்த பின்னர், நாகா தேசிய கவுன்சில் எனும் பெயரில் ஒரு போட்டி அரசே உருவாக்கப்படும் அளவுக்கு நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளில் அதிருப்தியும், பதற்றங்களும் நிறைந்திருந்தன. அசாம் அரசு 1955-ல் அசாம் பதற்றப் பகுதிகள் சட்டத்தைக் கொண்டுவந்ததும் பலனளிக்காத நிலையில், 1958-ல் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்து பல மாறுதல்களும் விரிவாக்கமும் செய்யப்பட்டன. இச்சட்டத்தில் உரிய மாறுதல் செய்யப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் மத்திய அரசால் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

2000 நவம்பர் மாதம், மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகில் உள்ள மலோம் எனும் சிறுநகரில் நடந்த என்கவுன்ட்ரில் 10 பேரை ஆயுதப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதைக் கண்டித்து சமூகச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா தொடங்கிய உண்ணாவிரதம் பெரும் கவனம் ஈர்த்தது. எனினும், இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை.

பொருளாதாரக் காரணிகளைவிடவும் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த காலத்தில் இந்தச் சட்டம் அவசியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறும் சூழலில், இந்தச் சட்டம் அமலில் இருப்பதுடன், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதும் பின்னடைவையே தரும் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

நாகா பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில், மோன் சம்பவத்தையும், ஆஃப்ஸ்பா சட்டத்தையும் முன்வைத்து நாகா கிளர்ச்சிக் குழுக்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. 1997-ல் நடந்த நாகா பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் அமலில் இருந்தாலும், அவ்வப்போது அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. ஆனால், அதையே காரணமாகக் கொண்டு அப்பாவி மக்கள் ராணுவத்தினரின் கையாலேயே கொல்லப்படுவதை அரசு எத்தனை ஆண்டுகளுக்கு அனுமதிக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in