
இந்திய எல்லையில் சீனா அவ்வப்போது அத்துமீறுவதும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் படைகளைத் திரும்பப் பெறுவதுமாக இருக்கிறது. 2020-ல் கல்வான் பகுதியில் இந்திய வீரர்களுடன் சீன வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டது, அதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டது எனப் பல்வேறு நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இந்நிலையில், லடாக்கில், மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே உள்ள சாங்தங் வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள், 508 ஹெக்டேர் நிலப்பகுதியில் இந்திய விமானப் படைத்தளத்தை மேம்படுத்தும் நடவடிக்கைக்கு தேசிய வனவிலங்கு வாரிய நிலைக்குழு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. கூடவே, சாங்தங் மற்றும் காராகோரம் வன விலங்கு சரணாலயப் பகுதியில் மேலும் 9 திட்டங்களுக்கு நிலைக்குழு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இப்பகுதிகளில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணிகளுக்கும் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு லடாக்கில், சர்வதேச எல்லையிலிருந்து 40-50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஹே துப்பாக்கிச் சூடு பயிற்சித் தளத்தை விரிவுபடுத்த சாங்தங் சரணாலயத்தில் 1259.25 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கவும் நிலைக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.
2020 ஜூன் மாதம் கல்வான் பகுதியில் நடந்த கைகலப்பைத் தொடர்ந்து, சீனாவின் அத்துமீறல்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சாங்தங் சரணாலயப் பகுதியில் விமானப் படை தளத்தை அமைப்பது குறித்த திட்டத்தை 2020 டிசம்பர் 12-ல் மாநில வனவிலங்கு நல வாரியத்திடம் விமானப் படை சமர்ப்பித்தது. தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2022 ஜூன் 29 அதற்கு ஒப்புதல் அளித்தது வனவிலங்கு நல வாரியம்.
இந்நிலையில், ஜூலை 29-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய நிலைக்குழுக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விமானப் படை இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.