`தினமும் தொந்தரவு செய்ததால் சாப்பாட்டில் விஷம் கலந்து கணவனை கொன்றேன்'- மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

`தினமும் தொந்தரவு செய்ததால் சாப்பாட்டில் விஷம் கலந்து கணவனை கொன்றேன்'- மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் கணவனை மனைவி விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன்.(40) கூலித் தொழிலாளியான இவருக்கு ஜெயக்கொடி என்னும் மனைவியும், மூன்று குழந்தைகளும் உண்டு. சிங்காரவேலனின் வீட்டின் அருகிலேயே அவரது தாயார் மூக்கம்மாளின் வீடு உள்ளது. நேற்று மதியம் போல் மூக்கம்மாள் எதார்த்தமாகத் தனது மகனின் வீட்டிற்கு வந்தார். அப்போது, சிங்காரவேலன் வீட்டில் வாந்தி எடுத்தவாறே மயங்கிய நிலையில் கிடந்தார். இதனைத் தொடர்ந்து சிங்காரவேலனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகு சிகிச்சைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிங்காரவேலன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று சிங்காவேலன் இறந்துவிட்டதாக உறவினர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டு, அவர் உடல் குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் திடகாத்திரமாக இருந்த தன் மகனின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் மூக்கம்மாள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸார், சிங்காரவேலனின் மனைவி ஜெயக்கொடியை விசாரித்தனர். விசாரணையில், சிங்கார வேலனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, தன்னையும், குழந்தைகளையும் தொந்தரவு செய்வார் என்றும், ஒருகட்டத்தில் அவரின் தொந்தரவு பொறுக்கமுடியாமல் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தார் ஜெயக்கொடி. இதனைத் தொடர்ந்து போலீஸார் ஜெயக்கொடியைக் கைது செய்தனர்.

ஒரு பக்கம் தந்தையை இழந்து, இன்னொருபுறத்தில் தாயை சிறைக்கு அழைத்துச் சென்றுவிட இவர்களின் மூன்று குழந்தைகளும் நிர்க்கதியாக நின்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in