கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி: தோல்வியடைந்த சதித்திட்டம்: திருமணம் நடந்த 22 நாளில் உயிரை மாய்த்த பெண்

கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி: தோல்வியடைந்த சதித்திட்டம்: திருமணம் நடந்த 22 நாளில் உயிரை மாய்த்த பெண்

தேனி மாவட்டத்தில் திருமணமான 22 நாளில் ஆட்களை ஏவி கணவனைக் கொலை செய்த முயற்சி தோல்வியடைந்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் கௌதம்(24). கேபிள் டிவியில் ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த மாதம் 10-ம் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 8-ம் தேதி புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் தற்கொலை செய்ததால், அவரது மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், திருமணத்துக்கு முன்பு போலீஸ் தேர்வுக்கு புவனேஸ்வரி பயிற்சி எடுத்தார். அத்துடன் அரசுத்துறையில் வேலை பார்ப்பவரையே திருமணம் செய்து கொண்டு, தானும் வேலை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். இதனால் புவனேஸ்வரிக்கு, தொடக்கத்தில் இருந்தே கௌதமைப் பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மண வாழ்க்கை ஏமாற்றமாக இருந்தது. எனவே கௌதமை கொலை செய்ய புவனேஸ்வரி திட்டமிட்டார். அவர் போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது, நிரஞ்சன் என்பவருடன் பழகி இருந்தார்.

தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை நிரஞ்சனிடம் கொடுத்து, என் கணவரை வெளியே அழைத்து வரும் போது நீங்கள் காரை ஏற்றிக் கொன்று விடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி திருமணமான 22-வது நாளில், அதாவது கடந்த 2-ம் தேதி புவனேஸ்வரி கணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை ஸ்கூட்டரில் வெளியில் அழைத்து வந்தார்.

இந்த நிலையில், அவர்கள் சென்ற டூவீலர் பழுதானது. இதனால் அந்த வாகனத்தை கௌதம் தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது பின்னால் ஒரு கார் வேகமாக கௌதம் மீது மோதியது. ஆனால், இதில் காயமில்லாமல் அவர் உயிர் தப்பினார். அப்போது காரில் இருந்து இறங்கிய 5 பேர் கௌதமை சரமாரியாகத் தாக்கிவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றனர். அந்த கார் எண்ணை வைத்து காவல் நிலையத்தில் கௌதம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் மற்றும் மர்மநபர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் கணவரை கொலை செய்ய போட்ட திட்டம் தெரிவித்து விடும் என்ற பயத்தில் புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் புவனேஸ்வரிக்கு உதவி செய்த நிரஞ்சன் உட்பட அவரது நண்பர்கள் ஐந்து பேரையும் கைது செய்துள்ளோம் என்றனர். கணவனைக் கொலை திட்டமிட்டு அந்த திட்டம் தோல்வியடைந்ததால், மனைவி தற்கொலை செய்த சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in