
திருநெல்வேலியில் குடும்பப் பிரச்சினையில் மனைவியை கொலை செய்த விவசாயியை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(58). இவரது மனைவி பேச்சியம்மாள்(52). இந்தத் தம்பதிக்கு இசக்கியம்மாள் என்னும் மகளும், ஒரு மகனும் உள்ளனர். இசக்கியம்மாளை அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். இந்தநிலையில் விவசாயி முருகனுக்கும், அவரது மனைவி பேச்சியம்மாளுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவரை விட்டுப் பிரிந்த பேச்சியம்மாள் தன் மகள் இசக்கியம்மாள் வீட்டுக்குப் போய்விட்டார்.
நேற்று மாலை அவரை பார்க்க முருகன் அங்கு சென்றார். அப்போது அவருக்கும், பேச்சியம்மாளுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பேச்சியம்மாளின் முகம், வயிறு எனப் பல இடங்களிலும் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய பேச்சியம்மாளை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதனிடையே மனைவியை கத்தியால் குத்திய முருகன் தலைமறைவானார். மருத்துவ சிகிச்சையில் இருந்த பேச்சியம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிர் இழந்தார். சுத்தமல்லி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த விவசாயி முருகனை போலீஸார் தனிப்படை உதவியுடன் கைது செய்தனர். குடும்பப் பிரச்சினையில் மனைவியை விவசாயி குத்திக் கொலை செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.