கள்ளக்காதலுக்கு இடையூறு... ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி: விபத்தில் இறந்தது போல் நாடகமாடியது அம்பலம்

கள்ளக்காதலுக்கு இடையூறு... ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி: விபத்தில் இறந்தது போல் நாடகமாடியது அம்பலம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தது போல் நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (45). ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தவருக்கு மின்வாரியத்தில் பணி கிடைத்தது. இதற்காக, மதுரை அரசரடியில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி முத்துராமலிங்கம் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நாடாகுளம் கண்மாய் பகுதியில் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில் அவர் கொண்டு சென்ற பேக் மற்றும் அவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் கிடந்தது.

இது தொடர்பாக முத்துராமலிங்கத்தின் சித்தப்பா மகன் முருகன், முத்துராமலிங்கம் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி திருச்சுழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதாவிடம் (43) விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன்படி, முத்துராமலிங்கம் நடத்தி வந்த ஒர்க்‌ஷாப்பில் மலையரசன் (25) பணியாற்றி வந்தார். அப்போது, சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த, முத்துராமலிங்கம் மனைவியை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை சுனிதா, கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனிடையே மலையரசன் மற்றும் சுனிதா இருவரும் சேர்ந்து திட்டமிட்டபடி முத்துராமலிங்கத்தை கட்டையால் அடித்துக்கொலை செய்துள்ளனர். மேலும், அவர் விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக உடலை இரு சக்கர வாகனத்தில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் எடுத்துச்சென்று நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரனேந்தல் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் போட்டுவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, முத்துராமலிங்கம் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து அவரது மனைவி சுனிதா மற்றும் கள்ளக்காதலன் மலையரசன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர் சிவா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in