
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் மனைவியை தற்கொலை செய்யத் தூண்டிய கணவருக்கு பத்து ஆண்டுகளும், மாமியாருக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம், மூவோட்டுகோணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். லாரி ஓட்டுநராக உள்ளார். இவர் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த செளமியா(24) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக இருந்தார். திருமணம் முடிந்து சிறிது நாள்களிலேயே ராஜேஷும், அவரது தாய் சசிகலாவும் சேர்ந்து செளமியாவிடம் வரதட்சணை கேட்டுத் தொல்லைக் கொடுத்து வந்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 2009-ம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் செளமியா.
பளுகல் போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல் திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகாததால் கோட்டாட்சியர் விசாரணை செய்தார். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதில் நீதிபதி ஜோசப் ஜாய் கொடுத்தத் தீர்ப்பில், தன் மனைவி செளமியாவை தற்கொலைக்குத் தூண்டிய கணவர் ராஜேஷுக்கு 10 ஆண்டுகள் சிறையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதேபோல் மாமியார் சசிகலாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.