என் மனைவியிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்… பாதுகாப்பு கேட்டு கோர்ட்டுக்குச் சென்ற கணவன்!

கணவனைத் தாக்கும் மனைவி.
கணவனைத் தாக்கும் மனைவி.

அன்றாடம் தாக்குதல் நடத்தும் மனைவியிடமிருந்து பாதுகாப்பு கொடுங்கள் என்று பள்ளி முதல்வர் நீதிமன்றம் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்சிங் யாதவ். தனியார் பள்ளி முதல்வராக உள்ளார். இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஹரியாணா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த சுமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணமான புதிதில் அவர்களது குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாகத் தான் இருந்துள்ளது. இதன் பின் இருவருக்குள்ளும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது கணவன் அஜித்தை, சுமன் கிரிக்கெட் பேட் மற்றும் சமையல் சட்டிகளைக் கொண்டு தாக்க ஆரம்பித்தார். அடி பொறுக்க முடியாமல் அவரிடமிருந்து அடிக்கடி அஜித் தப்பியோடி விடுவார். ஆனால், அடிக்கடி அடி வாங்கியதால், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட தீர்மானித்தார்.

இதற்காக அவரது வீட்டில் சிசிடிவி கேமராவைப் பொருத்தினார். இதன் பின்னும் தாக்குதல் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் மனைவி தாக்குவதால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அஜித் மனுதாக்கல் செய்தார். அத்துடன் அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் வழங்கினர். அதில் அவரை மனைவி தாக்கும்போது பயந்து நிற்கும் மகனின் காட்சியும் பதிவாகி இருந்து. இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அஜித்சிங் யாதவ் கூறுகையில், “பணியின் கண்ணியத்தை மனதில் கொண்டு வன்முறையை சகித்துக் கொண்டேன். ஆனாலும் என் மனைவி கடுமையாக தாக்கியதால் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்தேன். நான் சுமன் மீது கையைக் கூட உயர்த்தியதில்லை. சட்டத்தை கையில் எடுத்ததில்லை" என்று கூறினார். மனைவியிடம் அவர் அடிவாங்கிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in