கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை; கடன்காரர்கள் டார்ச்சர்: கணவரை கொடூரமாக கொன்ற மனைவி

கொலை
கொலை

தமிழக, கேரள எல்லையோரப் பகுதியில் உள்ள உதயன்குளங்கரை பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை மனைவி கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், உதயன்குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவர் கருப்பட்டியை மொத்தமாக வாங்கி விற்பனை செய்துவந்தார். இவருக்கு லூர்துமேரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். கருப்பட்டி வியாபாரத்தில் செல்லப்பனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் பலரிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். ஆனால் செல்லப்பன் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. ஒருகட்டத்தில் தன் பெயரில் இருந்த சொத்துக்களையும் விற்று கடனை அடைத்தார்.

ஆனாலும் கடன் முழுதாகத் தீரவில்லை. இதனால் செல்லப்பன் கடன் வாங்கிய பலரும் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அவரது மனைவி லூர்துமேரியிடமும் சண்டை போட்டனர். இதனால் செல்லப்பன், லூர்துமேரி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கணவர் செல்லப்பன் தூங்கிக் கொண்டு இருக்கும்போது அவரது தலையில் கோடாரியால் லூர்துமேரி கொடூரமாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செல்லப்பன் பரிதாபமாக உயிர் இழந்தார். பாறசாலை போலீஸார் விரைந்துவந்து லூர்துமேரியைக் கைது செய்தனர்.

போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் லூர்துமேரி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் கணவரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். கடன் தொல்லையால் இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என யூகிக்கும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in