ஷ்ரத்தா கொலைச்சுவடு மறையும் முன் டெல்லியில் அடுத்த சம்பவம்: கணவனை 10 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி, மகனுடன் கைது

அஞ்சான் தாஸ்சுடன், பூனம்.
அஞ்சான் தாஸ்சுடன், பூனம்.

தகாத உறவைத்தொடர்ந்த கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்து பத்து துண்டுகளாக்கி மனைவி வீசிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஜூன் 5-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் சில மனித உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன. பின்னர் மூன்று நாட்கள் கழித்து இரண்டு கால்கள், இரண்டு தொடைகள், ஒரு முழங்கை, மண்டை ஓடு கிடைத்தன. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீஸாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டது பாண்டவ் நகரில் வசித்த அஞ்சான்தாஸ் என்பது தெரிய வந்தது. திருமணத்தை மீறிய உறவைத் தொடர்ந்த அவரை மனைவி பூனம், மகன் தீபக் ஆகியோர் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

சிக்கிய சிசிடிவி காட்சி.
சிக்கிய சிசிடிவி காட்சி.

மே 30-ம் தேதி தூக்க மாத்திரை கொடுத்து அஞ்சான்தாஸை கொலை செய்து பின்பு 10 துண்டுகளாக்கி வீசியுள்ளனர். அஞ்சான்தாஸ் உடலை வீசுவதற்காக அவரது மகன் தீபக் பையுடன் அதிகாலை 2 மணியளவில் செல்லும் காட்சியும், அவரது தாய் பூனம் அவரைத் தொடர்ந்து செல்லும் சிசிடிவி காட்சியே இந்த கொலையில் குற்றவாளிகளைப் பிடிக்க பேருதவி செய்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பூனம், அவரது மகன் தீபக் ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக டெல்லி கிரைம் பிரிவு உதவி கமிஷனர் அமித் கோயல் கூறுகையில், " கொலையில் ஈடுபட்ட பூனத்தின் கணவர் 2016-ம் ஆண்டு காலமானார். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு அஞ்சான் தாஸை பூனம் திருமணம் செய்துள்ளார். அஞ்சான் தாஸ்க்கு ஏற்கெனவே பிஹாரில் ஒரு பெண்ணுடன் திருமணமாகி 8 குழந்தைகள் இருந்துள்ளன. இந்நிலையில், அஞ்சான் சம்பாத்தியம் ஏதுமின்றி வீட்டில் சண்டையிட்டவாறே இருந்துள்ளார். அத்துடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூனம் தன் மகனுடன் இணைந்து கொலை செய்து உடல் பாகங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்து பின்னர் அதனை அப்புறப்படுத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த 18-ம் தேதி ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்று அவரது உடலை 35 துண்டுளாக்கி வீசிய வழக்கில் அவரது காதலர் அஃப்தாப், கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் சுவடு மறையும் முன் அதே போன்ற அடுத்த சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in