கணவனுக்கு தூக்க மாத்திரையில் விருந்து: ஆந்திராவை அலறச் செய்த மனைவியின் கொடூரம்

ஜோதி - பைடி ராஜூ தம்பதி
ஜோதி - பைடி ராஜூ தம்பதி

கணவனுக்கு தூக்க மாத்திரை கலந்த விருந்தளித்து, காதலனுடன் சேர்ந்து கொன்று, எரித்து, காணமல் போனதாக நாடகமாடி, போக்குகாட்டிய மனைவியை ஆந்திர போலீஸார் ஒருவழியாக சிறையில் அடைத்துள்ளனர்.

திருமண உறவு கசந்து போனால் விலகிச் செல்லவும், விவாகரத்து பெறவும், விரும்பிய இன்னொரு உறவை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை தொடரவும், ஆண் பெண் இருபாலருக்கும் சட்டம் துணை நிற்கிறது. ஆனபோதும் தொடரும் திருமணத்துக்கு அப்பால் தாவும் போக்கும், அது கொலையில் முடிவதற்கும் மற்றொரு உதாரணமாகி இருக்கிறது இந்த ஆந்திர சம்பவம்.

அழகான 2 குழந்தைகள் மற்றும் மனைவி என மனநிறைவான வாழ்க்கையில் திளைத்திருந்தார் பைடி ராஜூ. ஆனால் மனைவி ஜோதிக்கு, நூக்கா ராஜூ (எ) சீனிவாச ராவ் என்றொரு காதலனுடன் உறவு இருந்ததை பைடி ராஜூ அறிந்திருக்கவில்லை. வசிப்பிடத்திலிருந்து 20 கிமீ தொலைவில் நூக்கா ராஜூ உடன் தனியாக வீடு எடுத்து, அவ்வப்போது சென்றுவரும் அளவுக்கு ஜோதி தீவிரமாக இருந்திருக்கிறார். பணிக்கு செல்வதாக மனைவி சொன்னதை பைடி ராஜுவும் அப்பாவியாக நம்பியிருக்கிறார். ஆனால் ஜோதி வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயரை பேச்சுவாக்கில் நண்பர்களிடம் சொன்னபோது, அப்படி ஒரு நிறுவனம் அப்பகுதியில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதனால் மனைவியின் போக்கில் சந்தேகம் எழுந்ததில், கண்காணிக்க ஆரம்பித்தார். அலைபேசி அழைப்பு முதல் வேலைக்கு செல்வது வரை கணவர் துழாவ ஆரம்பித்ததும் ஜோதி சுதாரித்தார். காதலன் நோக்காவுடன் சேர்ந்து நேக்காக ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, வேலையை விட்டதாகவும், திருந்திவிட்டதாகவும் கணவன் அறியும் வண்ணம் நடந்துகொள்ள ஆரம்பித்தார். காதலன் குறித்துக்கொடுத்த நாளின் இரவுணவில், கணவனுக்கு விருந்து சமைத்தார். பரிமாறிய எல்லா உணவிலும் தூக்க மாத்திரையை கலந்தார்.

நள்ளிரவில் வருகை தந்த நோக்கா ராஜூ உடன் சேர்ந்து மயங்கி கிடந்த கணவனை பிளாஸ்டிக் கயிறு கொண்டு கழுத்தை நெறித்து கொன்றார். நண்பன் பூலோகோ உதவியுடன் பைக்கில் சடலத்தை எடுத்துச் சென்று எங்கேனும் வைத்து எரிக்க முயன்றார் நோக்கா ராஜூ. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று தெரிந்ததும், காதல் களிப்புக்காக வாடகைக்கு எடுத்த வீட்டில் சடலத்தோடு ஒரு நாள் முழுக்க அமர்ந்து யோசித்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தவர்கள், வயதான உறவினர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாகவும், உறவினர் இல்லாத அவரின் இறுதி சடங்குக்கு உதவ வேண்டும் என்று கோரினார்கள். கேட்டதை விட 2 மடங்கு தொகை கிடைத்ததில் ஆம்புலன்ஸ் டிரைவர் சடலத்தை சுடுகாடுக்கு எடுத்துச்சென்று எரிக்க உதவியிருக்கிறார்.

கணவன் சாம்பலானதை உறுதிபடுத்திக்கொண்டதும், காவல் நிலையம் சென்ற ஜோதி ‘கணவனைக் காணோம்’ என்று புகார் அளித்தார். வழக்கமான புகார்களில் ஒன்றாக அதனை வரவில் வைத்து போலீஸார் விசாரித்து வந்தனர். அந்த போலீஸாரில் ஒருவருக்கு ஜோதியின் நடவடிக்கைகளில் ஐயம் எழவே, அவரது செல்போன் அழைப்புகளை ஆராய ஆரம்பித்தார். அதில் நோக்கா ராஜூ உடனான அழைப்புகளே அதிகம் இருந்தும், அந்த அழைப்பும் அதிக நேரம் நீடித்திருந்ததும் தெரிய வந்தன. செல்போன் சிக்னலை வைத்து நோக்கா ராஜூவை வளைத்த போலீஸார், அவனை அள்ளி வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் ஜோதியின் திருவிளையாடல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

இப்போது கணவனை கொன்ற வழக்கில் ஜோதி, காதலன் நோக்கா ராஜூ, உதவியாக இருந்த பூகோலோ என மூவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in