சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை ஜெர்மனியிடம் ஒப்படைத்தால் தமிழக சிலைக் கடத்தல் வழக்குகள் என்னாகும்?

சுபாஷ் சந்திர கபூர்
சுபாஷ் சந்திர கபூர்

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஜெர்மனி அரசிடம் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மை வாய்ந்த கோயில் சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்ற சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் என்ற சுபாஷ் கபூரை இன்டர்போல் உதவியுடன் ஜெர்மனியில் கடந்த 2011-ம் ஆண்டு சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து, சுபாஷ் கபூரை தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிபிஐ ஒப்படைத்தது. இந்தியரான சுபாஷ்கபூர் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர். இந்தியாவிலிருந்து தொன்மையான கோயில் சிலைகள் உள்ளிட்டவைகளை வெளிநாட்டுக்குக் கடத்தியதாக கபூர் மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் உண்டு. இருந்தாலும் கபூரை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்த முடியாமல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திணறி வந்தனர்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் நிலுவையில் இருந்த சிலைக்கடத்தல் வழக்குகளை தூசிதட்டி விசாரணையை துரிதப்படுத்தினார். அதில் பெரும்பாலான வழக்குகளில் சுபாஷ் கபூருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் தனது தீவிர முயற்சியால் கபூரை தமிழகம் கொண்டு வந்து விசாரணைக் கைதியாக சிறைக்குள் வைத்தார் பொன்.மாணிக்கவேல்.

முதலில் புழல் சிறையிலும் அதன் பிறகு திருச்சி மத்திய சிறையிலும் வைக்கப்பட்ட கபூர், புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதையெல்லாம் சுட்டிக்காட்டி அவருக்கு பலமுறை ஜாமீன் கோரப்பட்டது. ஆனால், கபூரை ஜாமீனில் விடுவித்தால் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவார். அதன்பிறகு அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவது சிரமம் என்று சொல்லி அவருக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்தார் பொன். மாணிக்கவேல்.

அதேசமயம், அவர் மீது புதிது புதிதாக வழக்குகளை பதிவு செய்து அந்த வழக்குகளிலும் கபூரைக் கைது செய்தார். அந்த வகையில் கபூர் மீது ஐந்து வழக்குகள் தமிழகத்தில் பதிவுசெய்யப்பட்டன. அதேசமயத்தில், வெளிநாடுகளிலும் கபூர் மீது வழக்குகள் பதிவாகின. தமிழகத்தில் பதிவான வழக்குகள் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், உடையார்பாளையத்தில் 94 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 தொன்மையான சாமி சிலைகளை நியூயார்க்கிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கபூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருந்தபோதும் இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கபூர் தரப்பு வழக்கை இழுத்தடித்ததால் தீர்ப்பு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனிடையே, ஜெர்மன் குடிமகனான சுபாஷ் கபூரை இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜெர்மனி அரசு கடந்த 2011-ம் ஆண்டு ஒப்படைத்த போது, 10 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்து சுபாஷ் கபூரை ஒப்படைத்து விடுவதாக ஜெர்மனி அரசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், 10 ஆண்டு களுக்கும் மேலாக வழக்கு விசாரணை முடிக்கப்படாததால் சுபாஷ் கபூரை திரும்ப ஒப்படைக்குமாறு ஜெர்மனி அரசு கேட்டுக்கொண்டது. மேலும், தொடர்ந்து காலதாமதம் ஆவதால் ஜெர்மனி அரசானது, இந்திய அரசுடன் குற்றவாளிகளை பரிமாறி கொள்வதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தை முடித்துக்கொள் வதாகவும் அறிவித்தது. இதனால் இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வின்யா குவார்ட்டா இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து உடையார்பாளையம் சிலைக் கடத்தல் வழக்கில் விரைவாக விசாரணையை முடிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடையார்பாளையம் சிலைக் கடத்தல் வழக்கில் சுபாஷ் கபூர் மற்றும் அவரது இந்தியக் கூட்டாளிகளான சஞ்சீவ் அசோகன், மாரிசாமி, பாக்யகுமார், ஸ்ரீராம், பார்த்திபன் ஆகிய ஆறு பேரும் குற்றவாளி என நேற்று தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளியான சுபாஷ் கபூருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சுபாஷ் கபூர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்திருப்பதாலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாலும் சுபாஷ் கபூர் விடுதலையாக வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சுபாஷ் கபூர் விடுதலை செய்யப்பட்டாலும் திருச்சி முகாமில் வைக்கப்படுவார். அதனைத் தொடர்ந்து, உரிய சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இந்திய அரசு மூலமாக ஜெர்மனி அரசிடம் கபூர் முறைப்படி ஒப்படைக்கப்படுவார்.

சுபாஷ் கபூர் ஜெர்மனி அரசிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அவர் மீது நிலுவையில் இருக்கும் மற்ற நான்கு வழக்குகளை விசாரித்து முடிக்கும் வரை அவரை இந்திய அரசிடம் ஒப்படைக்கும்படி கடிதம் எழுதப்படும் என தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். ஆனால், கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தை ஜெர்மனி அரசு ரத்து செய்துவிட்டதால் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.

இதனிடையே, அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி போலீஸாரும் சுபாஷ் கபூர் மீது கலைப்பொருள் திருட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதனால், அவர்களும் கபூரை தங்கள் வசம் விசாரணைக்கு ஒப்படைக்கக் கோரி ஜெர்மனி அரசுக்கு கடிதம் எழுதக்கூடும் என்கிறார்கள். ஆக, கபூரை எந்த நாட்டிடம் ஒப்படைப்பது என்பது ஜெர்மனி அரசின் கையில் இருக்கிறது.

ஒருவேளை, இந்திய அரசிடம் ஒப்படைக்காமல் கபூர் அமெரிக்கா வசம் ஒப்படைக்கப்பட்டால் கபூரை மீண்டும் இந்தியா கொண்டு வருவது சாத்தியமில்லாத விஷயமாகவே போய்விடும். புற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கபூரின் உடல் நிலையும் அடுத்தகட்ட விசாரணைக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பதும் கேள்விக்குறியே. அதேசமயம், முக்கிய குற்றவாளியான கபூர் இங்கே இல்லாத பட்சத்தில் அவர் மீது நிலுவையில் இருக்கும் தமிழக சிலைக்கடத்தல் வழக்குகளின் நிலையும் கேள்விக்குறியாகிவிடும் என்பதும் முக்கியமான விஷயம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in