டார்கெட் தென்னிந்தியா... 400 தொகுதிகளை பெற பாஜகவின் திட்டம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாட்டின் 17வது மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதை விட, இதுவரை எந்தக் கட்சியும் பெறாத ஒரு வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. அதாவது 400 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையுடன் ஆட்சியமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், பாஜக 303 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதில் 80 சதவீத வெற்றி என்பது வடமாநிலங்களில் இருந்தே கிடைத்தன. அதனால், கர்நாடகா தவிர்த்து தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. அது வெற்றியைப் பாதிக்கவும் இல்லை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இன்றைய சூழலிலும் பாஜக மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன. அதற்கு வடமாநிலங்களில் வீசக்கூடிய மோடி அலையே கூட போதுமானது. ஆனால், அந்த கட்சி எதிர்பார்க்கும் 400க்கும் கூடுதலான தொகுதிகளைப் பெற வேண்டும் என்றால், தென்மாநிலங்களில் வென்றால் மட்டுமே முடியும். ஏனெனில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் மட்டும் 131 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் வென்றால் மட்டுமே பாஜகவின் கனவான 400 தொகுதிகளை எட்ட முடியும்.

குமாரசாமி, எடியூரப்பா
குமாரசாமி, எடியூரப்பா

இந்த சூழலில் பாஜக தென்னிந்தியாவில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. தென்மாநிலங்களில் பாஜக வலுவாக உள்ளே ஒரே மாநிலம் கர்நாடகா. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ஐ கைப்பற்றியது. அதேநேரம், சட்டமன்ற தேர்தலில் தோற்றது. அதனால், இம்முறை, காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில்கொண்டே தேவகவுடாவின் கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும், மீண்டும் தேர்தல் களத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை களமிறக்கியுள்ளது. இதன் மூலம் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி அளிக்க முடியும்.

பிரதமர் மோடி, அண்ணாமலை
பிரதமர் மோடி, அண்ணாமலை

தென்னிந்தியாவிலேயே அதிகமாக மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட மாநிலம் என்றால், அது தமிழகம் தான். இங்கு 39 தொகுதிகள் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதியில் அதிமுக வென்றது. அதேநேரம், சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக இருந்த அதிமுக தற்போது, கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. அதன் காரணமாக பாஜக தனித்தோ அல்லது தன்னுடன் கூட்டணிக்கு வரும் சிறிய கட்சிகளையோ இணைத்துக் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதோடு, தமிழகத்தில் இம்முறை தனது தடத்தைப் பதியவைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக உள்ளதன் காரணமாகப் பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்திற்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் மோடி, ராமேஸ்வரம்
பிரதமர் மோடி, ராமேஸ்வரம்

ராமர் கோயில் திறப்பிற்கு முன் தமிழகம் வந்த அவர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் பயணம் செய்து சென்றார். அதேநேரம், தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை தனது என் மண், என் மக்கள் யாத்திரை மூலம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள் 450 முறை தமிழகத்திற்குப் பயணம் செய்துள்ளனர். பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாம் அந்த கட்சிக்கு எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் கொடுக்குமா என்பது தேர்தல் முடிவிலேயே தெரியும்.

அமித் ஷா தெலங்கானா
அமித் ஷா தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த தேர்தலில் 4 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகளின் செல்வாக்கை மீறி பாஜக அங்கு வெற்றி பெற்றது. அதேபோல், அந்த கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவும் தெலங்கானாவில் உயர்ந்து வருகிறது. ஆனால், இம்முறை காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்துள்ள நிலையில், அதன் பலம் கூடியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ், பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் என கடும் போட்டிகளுக்கு இடையே வெற்றி பெற்றாகவே வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது.

சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, ஜெகன்மோகன் ரெட்டி
சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு பாஜக சொல்லிக்கொள்ளும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால், இம்முறை அங்குப் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஜனாசேனா கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த 3 கட்சிகளின் கூட்டணி ஆந்திராவில், தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக குறைந்தது 10 இடங்களில் போட்டியிட விரும்புவதாகவே கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜக அங்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் கூட உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிசி ஜார்ஜ்
பிசி ஜார்ஜ்

தமிழகம், ஆந்திர மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பாஜக தொடர்ந்து திணறி வரும் மாநிலம் என்றால் அது கேரளா எனலாம். ஏனெனில் அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளில் செல்வாக்கும், கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்காளர்களும் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர்.

இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த கேரள ஜனபக்‌ஷம் கட்சி, முழுமையாக தற்போது பாஜகவில் இணைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த பிசி ஜார்ஜ், அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

பிசி ஜார்ஜ்
பிசி ஜார்ஜ்

அதேபோல், 18 சதவீதம் கிறிஸ்தவ மக்கள் உள்ள கேரளாவில், பாஜக கணிசமான வாக்குகளை கேசி ஜார்ஜ் மூலம் அறுவடை செய்ய முடியும் என்ற திட்டத்திலும் உள்ளது. கேரளா தவிர்த்து இந்தியா கூட்டணியில் ஒன்றாக இருப்பதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட்டுகளும் அங்கு எதிர் எதிர் துருவங்களில் உள்ளனர். இம்முறை கேரளாவில் ராகுல் போட்டியிடுவதைக் கூட கம்யூனிஸ்ட்டுகள் விரும்பவில்லை. இதனால், இம்முறை பாஜக தனது பலத்தை நிரூபிக்கப் போராடும் என்றே தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இப்படி ஒரு பக்கம் கூட்டணியையும், வியூகங்களையும் வகுத்து வரும் பாஜக, பல்வேறு திட்டங்களையும் தென்னிந்தியா நோக்கி செயல்படுத்தி வருகிறது. ஒரே நேரத்தில் வளர்ச்சி, கூட்டணி என இருவிஷயங்களை மையப்படுத்தி தென்னிந்தியா முழுவதும் தனது வாக்கு சேகரிக்கும் திட்டத்தில் பாஜக உள்ளது. இவை அந்த கட்சிக்குப் பலன் அளிக்குமா, பிரதமர் நரேந்திர மோடியின் 400 தொகுதிகள் வெற்றி என்ற கனவு பலிக்குமா என்பது இன்னும் 4 மாதங்களில் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in