குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை சிவசேனா ஆதரிப்பது ஏன்?

மார்கரெட் ஆல்வா
மார்கரெட் ஆல்வா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், வேட்புமனுத் தாக்கல் நாளை (ஜூலை 19) தொடங்குகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரெளதி முர்முவை ஆதரிப்பதாக அறிவித்த சிவசேனா கட்சி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

பாஜக சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், சனிக்கிழமை (ஜூலை 16) அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த கே.கேசவ் ராவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஏடி சிங், சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஈ.டி.முகமது பஷீர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா மற்றும் பினோய் பிஸ்வர்ம், கேரள காங்கிரஸ் (எம்) சார்பில் ஜோஸ் கே மணி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

இதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் மம்தா பானர்ஜியால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், அவருடன் இதுதொடர்பாகப் பேசியிருப்பதாகவும் சரத் பவார் விளக்கமளித்திருந்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக சரத் பவார் நேற்று காலை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா, மாநிலங்களை உறுப்பினர், மத்திய அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.

அதேசமயம், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக முன்னிறுத்திய திரெளபதி முர்முவை ஆதரிப்பதாகத் தெரிவித்த சிவசேனா கட்சி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மார்கரெட் ஆல்வாவை ஆதரிப்பது பலரைப் புருவமுயர்த்தச் செய்திருக்கிறது. பாஜக ஆதரவுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் கலகம் செய்ததால் மகாராஷ்டிரத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த சிவசேனா கட்சி, பல்வேறு சமரசங்களுக்காக திரெளபதி முர்முவை ஆதரிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இதுதொடர்பாக நேற்று (ஜூலை 17) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டும் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பது குறித்து விளக்கம் அளித்தார்.

“திரெளபதி முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண். மகாராஷ்டிரத்தில் பழங்குடியினர் அதிகம் உள்ளனர். எங்கள் கட்சி எம்.பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பழங்குடியினர். அதனால்தான் சிவசேனா கட்சி திரெளபதி முர்முவை ஆதரிக்கிறது” என்று கூறிய அவர், “ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மார்கரெட் ஆல்வாவைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in