
தமிழகத்தில் சுருக்கு மடி மீன்பிடி வலைகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள கடற்பரப்பில் சுருக்கு மடி வலை மூலம் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மற்ற ஒரு சில மாநிலங்களில் சுருக்கு மடி வலை நடைமுறையில் இருக்கும் போது தமிழகம் மட்டும் ஏன் தடை விதிக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது தமிழக அரசு சார்பில், சுருக்கு மடி வலைகள் மூலம் மீன் பிடிப்பதால் மீன் குஞ்சுகள் கூட மாட்டிக்கொள்கின்றன. இதனால், மீன் வளம் குறையும் அபாயம் உருவாகி விடுகிறது. கடல் வளம் காக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
இதற்கு வழக்குத் தொடர்ந்தவர் தரப்பில், சுருக்கு மடி வலையில் சிறு மீன்குஞ்சுகள் மாட்டுவது இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.