திண்டுக்கல்லில் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சந்தா கட்டாத பேராசிரியையும் அவரது மகனையும் தாக்கிய காவலாளியின் செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் ஏர்போர்ட் நகர் உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தனித்தனி வீடுகளாக உள்ள இங்கு அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் என பலரும் குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் கவிதா என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் இப்பகுதியில் வீடு ஒன்றை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார்.
இவரது கணவர் வெளியூரில் பணியாற்றி வரும் நிலையில் கவிதா தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் ஏர்போர்ட் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இச்சங்கத்தினர் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 500 ரூபாய் வசூலித்து வருகின்றனர். இதனிடையே புதிதாக குடியேறிய கவிதாவிடமும் சந்தா கட்டணம் கேட்டுள்ளனர். கவிதாவோ இப்போதுதான் குடிவந்துள்ளேன். அடுத்த மாதம் தருகிறேன் என கூறியுள்ளார்.
இந்தநிலையில் குடியிருப்பு காவலாளி கில்பர்ட் என்பவர் மூலம் கவிதாவிடம் சந்தா வாங்கிவர கூறியுள்ளனர். அப்போதும் சந்தா தராததால் காவலாளி கவிதாவை திட்டி சென்றுள்ளார். மறுநாளும் பணி முடித்து மகனுடன் வந்த கவிதாவை பார்த்து காவலாளி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு எழுந்தது. இதில் கவிதாவையும் அவரது மகனையும் காவலாளி தாக்கியதோடு, காவல் நிலையத்தில் தன்னை கவிதாவும் அவரது மகனும் தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையின் போது அங்கு பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில், கவிதாவை காவலாளி தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனாலும் காவலாளி மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில் இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.