‘ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் ஏன் இடம்பெறக் கூடாது?’

லக்‌ஷ்மி, விநாயகர் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிடக் கோரிய அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கேள்வி
‘ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் ஏன் இடம்பெறக் கூடாது?’

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுக்க ரூபாய் நோட்டுகளில் லக்‌ஷ்மி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கும் நிலையில், புதிய நோட்டுகளில் ஏன் அம்பேத்கர் படம் இடம்பெறக் கூடாது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்துவருவது குறித்து கவலை தெரிவித்ததுடன், “ரூபாய் நோட்டுகளில் லக்‌ஷ்மி, விநாயகர் படங்கள் இடம்பெற்றால், ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவர்களின் அருளாசி கிடைக்கும். கடவுள் லக்‌ஷ்மியைச் செல்வத்தின் கடவுளாகக் கருதுகிறோம். விநாயகர் வினை தீர்க்கும் கடவுளாகக் கருதப்படுகிறார். எனவே இருவரின் படங்களும் புதிய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகள் அவசியம். அவற்றுடன் சேர்த்து, தேவி, தேவர்களின் ஆசீர்வாதமும் நமக்கு அவசியம்” என்றும் கூறிய கேஜ்ரிவால், இதுகுறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதப்போவதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, குஜராத் தேர்தலை மனதில் கொண்டு போட்டி இந்துத்துவா அரசியலை ஆம் ஆத்மி கட்சி முன்னெடுப்பதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்நிலையில், பஞ்சாபின் ஆனந்தபூர் சாஹிப் தொகுதி எம்.பி-யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணீஷ் திவாரியும் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாட்டை விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று ட்வீட் செய்திருக்கும் அவர், ‘புதிய கரன்ஸி நோட்டுகளில் ஏன் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் படம் இடம்பெறக் கூடாது? ரூபாய் நோட்டின் ஒருபக்கம் மகாத்மா காந்தி மறுபுறம் டாக்டர் அம்பேத்கர் இருக்கலாமே’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in