ஏன் எகிறுகிறது எலுமிச்சை விலை?

ஏன் எகிறுகிறது எலுமிச்சை விலை?

வெயில் காலத்தில் தொண்டை வறண்டுகிடக்கிறதே என எலுமிச்சை பழச்சாறு அருந்த நினைப்பவர்கள், இப்போது தயங்கி நிற்கிறார்கள். எலுமிச்சை வாங்கி ஊறுகாய் போடக்கூட பலரும் யோசிக்கிறார்கள். காரணம், கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் எலுமிச்சையின் விலை மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள காஸியாபாத் பகுதியில் மொத்த விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 350 ரூபாயைத் தாண்டிவிட்டது. குஜராத்தில் ஒரு கிலோ 200 ரூபாயைத் தாண்டுகிறது. இத்தனைக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் எலுமிச்சையின் விலை 50 முதல் 100 ரூபாய்க்குள்தான் இருந்தது.

“முன்பெல்லாம், ஒரு மூட்டை எலுமிச்சை 700 ரூபாய்க்குக் கிடைத்தது. தற்போது அது 3,500 ரூபாயாகியிருக்கிறது. இப்போது 10 ரூபாய்க்கு ஒரு எலுமிச்சையை விற்க வேண்டியிருக்கிறது. இதனால் அதை வாங்க யாரும் தயாராக இல்லை” என்கிறார்கள் சில்லறை வியாபாரிகள். இதற்கு முன்னர் 150 ரூபாய்க்குத்தான் அதிகபட்சமாக எலுமிச்சையின் விலை அதிகரித்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எலுமிச்சை மட்டுமல்ல மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்திருக்கிறது. பல கடைகளில் கொசுறாக பச்சை மிளகாய் கொடுப்பதையே நிறுத்திவிட்டார்கள்.

தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலை இதற்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.கோடை காலத்தில் எலுமிச்சையின் தேவை அதிகரிக்கும் என்பதாலும், தற்போது ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையாலும் விலை உயர்ந்திருக்கும் என்கிறார்கள் சிலர். ரம்ஜான் பண்டிகைக்காலம் என்பதாலும் எலுமிச்சையின் தேவை அதிகரித்திருக்கிறது. இதுவும் எலுமிச்சை விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் வியாபாரிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in