இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? எப்போது மீளும்?

இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? எப்போது மீளும்?

கடந்த ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 - 80 என்ற அளவிலேயே இருந்துவந்தது. ஆனால், நேற்று மாலை 5 மணி அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.66 வரை சென்றது. இந்த நிலை இன்னும் சில காலம் நீடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். இதற்கு என்ன காரணம்?

உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்

கடந்த 21-ம் தேதி அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் வரும் நவம்பர் 0.75 சதவீதமும் டிசம்பர் மாதம் 0.50 சதவீதமும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வந்த உடனே ஆசிய கரன்ஸிகள் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டன. சர்வதேச கரன்ஸி சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியது. மேலும், சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்தும், கடன் பத்திரங்களில் இருந்தும் தங்களது முதலீட்டை வெளியில் எடுக்கத் தொடங்கினர். இதனால் சந்தையில் எதிர்மறைச் சூழல் நிலவியது. இதன் காரணமாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

அச்சுறுத்தும் சர்வதேசப் பணவீக்கம்

பெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் சர்வதேசப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மட்டுமல்லாமல் யூரோ, ஜப்பானிய யென் போன்றவையும் வீழ்ச்சியடைந்துள்ளன. ரஷ்யா- உக்ரைன் போரால் யூரோவின் மதிப்பு ஏற்கெனவே நெருக்கடியில் உள்ளது. பணவீக்கமும் இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் பணவீக்கம் 8.3 சதவீதமாக உள்ளதாக செப்டம்பர் 13-ம் தேதி அமெரிக்க அரசு தெரித்தது. கடந்த ஜூன் மாதம் பணவீக்கம் 9.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பணவீக்கம் கீழ்நோக்கி சென்றாலும் அடிப்படை பணவீக்கம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அடிப்படைப் பணவீக்கம் அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குப் பாதிப்பா?

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பேசப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வென்ச்சர் கேபிடல் மற்றும் ஆரம்பக்கட்ட முதலீடுகள் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் செயல்பாட்டுச் செலவும், விற்பனையும் குறையும் என்றும் சில யூனிகார்ன் நிறுவனங்களின் மதிப்பும் குறையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

விலைவாசி உயருமா?

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்திருப்பதால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை வர்த்தகம் டாலர் மதிப்பில் நடைபெறுவதால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவில் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவைச் சந்திப்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இறக்குமதியாளர்களுக்கு அதிக விலை கொடுத்து பொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தேவை மற்றும் வழங்கலில் (Demand and Supply) ஒரு சமமற்ற நிலை ஏற்படும். இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் சரிவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.

நிலைமை சரியாகுமா?

இந்திய ரிசர்வ் வங்கி மேலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே பலரும் அறிவுறுத்துகிறார்கள். மேலும், அத்தியாவசியமில்லாத பொருட்களின் இறக்குமதியை சில காலம் தடை செய்ய உத்தரவிட வேண்டும் என வங்கிகள் கோரிக்கைகள் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நிய செலாவணி கையிருப்பும் கடந்த ஆண்டைவிடவும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அடுத்த இரு மாதங்களுக்குத் தொடர்ந்து வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் உயர்த்தும் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரு மாதங்களுக்கு ரூபாய் மதிப்பு உயர வாய்ப்பில்லை. மேலும் வீழ்ச்சியடையாமல் தடுப்பதற்கே ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அப்படிச் செய்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையாமல் தடுக்க முடியும். சர்வதேசப் பொருளாதார மந்தநிலையையும் சமாளிக்க முடியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in