'வரதட்சணை பணமில்லாமல் எதற்கு வந்தாய்?': மனைவி முகத்தில் ஆசிட் வீசிய கொடூர கணவன்

அமீர்கான், ஹினா பர்வீன்.
அமீர்கான், ஹினா பர்வீன்.

பைக் வாங்குவதற்கு வரதட்சணையாக 70 ஆயிரம் ரூபாய் வாங்கி வராத மனைவி முகத்தில் கணவன் ஆசிட் வீசிய சம்பவம் ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியைச் சேர்ந்தவர் அமீர்கான். இவரது மனைவி ஹினா பர்வீன். நேற்று வீட்டில் ஹினா பர்வீன் முகத்தை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அமீர்கான், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ஹினா பர்வீன் முகத்தில் ஊற்றினார். இதனால் முகம் வெந்து ஹினா பர்வீன் அலறித் துடித்தார். இதனால் அங்கிருந்து அமீர்கான் தப்பியோடி விட்டார். ஹினாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது அத்தை, உடனடியாக அவரை மீட்டு ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன(RIMS) மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், வரதட்சணை கேட்டு அமீர்கான் ஹினா பர்வீனைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. பைக் வாங்க வேண்டும் என அதற்கு 70 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று ஹினாவை அமீர்கான் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் நேற்று முன்தினம், தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தந்தையிடம் ஹினா பர்வீன் பணம் கேட்டுள்ளார். விரைவில் பைக் பணம் வாங்க பணம் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவரது தந்தையும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனது கணவரிடம் விரைவில் பைக் வாங்க அப்பா பணம் ரெடி செய்து தருவதாக ஹினா சொல்லியுள்ளார். பணம் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டில் வாங்கி மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ஹினா முகத்தில் அமீர்கான் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர். முகம் முழுவதும் வெந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஹினா பர்வீன் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் ராஞ்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in