தாயின் சடலத்தின் முன்பு குடும்பமாக அமர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்தது ஏன்?- விமர்சனத்துக்கு பிள்ளைகள் விளக்கம்

தாயின் சடலத்தின் முன்பு குடும்பமாக அமர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்தது ஏன்?- விமர்சனத்துக்கு பிள்ளைகள் விளக்கம்

கேரளத்தில் இறந்துபோன ஒரு சடலத்தின் முன்பு அமர்ந்து, மொத்தக் குடும்பமும் சிரித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. நடுவில் இருப்பது கேக் இல்லை என நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு விமர்சனக் கணைகளை அள்ளி வீசினர். இப்போது இவ்விவகாரம் குறித்து அவர்களது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளியைச் சேர்ந்த மரியம்மாவுக்கு 95 வயது. கடந்த புதன் கிழமையன்று மரணமடைந்தார். அவரது சடலம், குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருக்க மொத்தக் குடும்பமும் சுற்றியிருந்து முகம் மலர்ந்த புன்னகையுடன் போஸ் கொடுத்தனர். இது சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் இறந்துபோன மரியம்மா பாட்டியின் குடும்பத்தினர் இதுகுறித்து கூறுகையில், “மரியம்மா பெருவாழ்வு வாழ்ந்துவிட்டு 95 வயதில்தான் மரணித்திருக்கிறார். மக்கள், மருமக்கள், பேரக்குழந்தைகள் என நான்கு தலைமுறைகளைப் பார்த்தவர் அவர். பாட்டி குறித்த நல்ல நினைவுகளை அசைபோட்டோம். 95 வயதுக்குப்பின் மரணம் என்பது நிறைவான வாழ்வு. அதனால் அந்த நிறைவான வாழ்வில் ஒவ்வொருவருக்கும் கிடைத்த இளைப்பாறுதலை பகிர்ந்துவிட்டு புகைப்படமாக அந்தத் தருணத்தை சேமித்தோம்.

மரியம்மாவுக்கு 9 பிள்ளைகள். எங்கள் குடும்பத்தில் பாதிரியார்களும், பிஷப்பும் உண்டு. அனைவரும் மரியம்மாவின் காலடியில் இருந்து பிரார்த்தனை செய்தோம். இவ்வளவு ஏன் மரியம்மாவின் கணவரே போதகராக இருந்தவர்தான். பிரார்த்தனைகளை குறைவின்றி செய்துவிட்டே, குடும்பமாக பாட்டியின் நினைவைப் பகிர்ந்துவிட்டு புகைப்படம் எடுத்தோம். எங்கள் குடும்பக் குழுவில் மட்டுமே பதிவேற்றிய புகைப்படம் வைரல் ஆகிவிட்டது. அதன் உண்மையான காரணம் தெரியாமல் பலரும் விமர்சனங்களை அள்ளி வீசுகின்றனர்” என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in