குமரியில் 4 நாட்கள் தங்கியிருந்த குக்கர் குண்டுவெடிப்பு குற்றவாளி ஷாரிக்: விவரங்களை திரட்டும் போலீஸ்

முகமது ஷாரிக்
முகமது ஷாரிக்

கர்நாடகாவில் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முகமது ஷாரிக் நான்கு நாள்கள் நாகர்கோவிலில் முகாமிட்டிருந்த சம்பவம் தெரியவந்துள்ளது. அவர் இங்கு யாரையெல்லாம் சந்தித்துப் பேசினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகாவின் மங்களூரில்  சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று  திடீரென வெடித்துச் சிதறியது. முதலில் இது தற்செயலான  தீ விபத்து என்று கருதப்பட்ட நிலையில் இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில்  கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல் என்று கர்நாடக டிஜிபி பரிவீன் சூட் தெரிவித்தார். இதில் எரிந்த நிலையில் இருந்த குக்குருடன்,பேட்டரியும் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் இது குக்கர் வெடிகுண்டு என்பது தெரியவந்தது.

இதுகுறித்து  கர்நாடக போலீஸாருடன்  மத்திய விசாரணை அமைப்புகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்டோவில் பயணித்த பயணியும், ஆட்டோ ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்டோவில் இருந்த பயணியால் போலீஸாரிடம் பேசமுடியவில்லை. இருந்தும் போலீஸாரின் தீவிர விசாரணையில் அவர் பெயர் ஷாரிக் என்பதும், நதிக்கரை குண்டுவெடிப்பு வழக்கில் ஷாரிக்கை ஏற்கெனவே போலீஸார் தேடிவந்ததும் தெரியவந்தது.

அவரிடம் கையில் இருந்த ஆதார்கார்டும் போலியானதாக இருந்தது. அது பிரேம்ராஜ் என்னும் ரயில்வே ஊழியருக்குச் சொந்தமானது. அவர் தன் ஆதார்கார்டு தொலைந்துவிட்டதாகக் கருதிய நிலையில் ஷாரிக் அதை திருடி தீவிரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

முன்னதாக மாதஹள்ளி பகுதியில் ஷாரிக் குடியிருந்த வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போதுதான் இதில் ஷாரிக் மட்டுமல்லாது, பரந்த நெட்வொர்க் இதன் பின்னால் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கோவை சிங்காநல்லூரில் தங்கியிருந்த ஷாரிக், அங்கு சுரேந்திரன் என்ற ஆசிரியரின் ஆதார்கார்டைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த சுரேந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் அசாமைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் 30 மணிநேரம் விசாரணை நடந்தது. அஜீம் ரகுமான் பாஸ்ட் புட்(துரித உணவகம்) கடையில் வேலை செய்துவந்தார். ஷாரிக்கிடம் இருந்து வந்த போன், முதலில் அஜீம் வேலை செய்யும் பாஸ்ட் புட் கடையின் உரிமையாளரான பெண்ணுக்குத்தான் வந்துள்ளது. ஆனால் அவருக்கு மொழி தெரியவில்லை. போலீஸார் முதலில் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தனர். அதில், அந்தப் பெண்ணுக்கு தவறுதலாக வந்த அழைப்பு அது எனத் தெரியவந்தது. அந்த பெண் தான், ஷாரிக்கின் போனை மொழி தெரியாததால் அஜீம் ரகுமானிடம் கொடுத்துள்ளார். ஷாரிக்கிற்கும், அஜீம் ரகுமானுக்கும் தொடர்பு இல்லை என்ற விவரம் தெரியவந்ததும் போலீஸார் அவரை விடுவித்தனர்.

இதனிடையே கோவையில் இருந்து நாகர்கோவில் வந்த ஷாரிக் இங்கு நான்கு நாள்கள் தங்கிவிட்டு கேரளம் சென்றதாக மங்களூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஷாரிக், குமரி மாவட்டத்தில் எந்த விடுதியில், எந்த பெயரில் தங்கினார்? கடந்த நான்கு மாதங்களில் புதியவர்கள் யாரெல்லாம் அறை எடுத்துத் தங்கினார்கள் என்னும் விவரம் விடுதி உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. அதேபோல் சிசிடிவி கேமராக்களின் அடிப்படையிலும் ஷாரிக்கை யாரெல்லாம் சந்திக்க வந்தனர் என்ற விவரங்களை சேகரிக்கவும் குமரி எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். ஷாரிக் நான்கு நாள்கள் குமரியில் தங்கியது ஏன்? என்னும் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in