அதி உளவுக்கு செயற்கைக்கோள் இருக்க, பலூன் எதற்கு?

அமெரிக்கா வீழ்த்திய சீன உளவு பலூன் விவகாரம்
உளவு செயற்கைக்கோள்
உளவு செயற்கைக்கோள்

அமெரிக்க வான் எல்லைக்குள் ஊடுருவிய சீன உளவு பலூனால் சர்வதேச அளவில் எழுந்த பரபரப்புகளுக்கு மத்தியில், அதனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் அமெரிக்கா - சீனா இடையிலான பதட்டம் மேலும் அதிகரித்திருத்துள்ளது. இதன் இடையே, அந்நிய தேசங்களை உளவு பார்ப்பதற்கு என அதி நவீன செயற்கைக்கோள்கள் இருக்கையில், தலைமுறைகள் பிந்தைய பலூன்களை சீனா ஏவியது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அமெரிக்காவின் ராணுவ படைத்தளங்களை உளவு பார்த்ததாக, அதன் வான் பரப்பில் உலவிய சீன உளவு பலூன் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தி உள்ளது. ஏற்கனவே தைவான் மற்றும் தென்சீனக் கடல் விவகாரங்களில் இரு வல்லரசு தேசங்களுக்கும் இடையே உரசல் பற்றி எரிந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் விவகாரத்திலும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் வெளிப்படையாகவும், ரஷ்யாவுக்கு சீனா மறைமுகமாகவும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சீனா பலூன்களை ஏவி உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளானது. வானிலை ஆய்வு என்ற போர்வையிலான இந்த உளவு பலூன்கள், இரண்டு தலைமுறைக்கும் காலத்தில் பிந்தையவை. இரண்டாம் உலகப்போரில் குண்டு வீச்சு முதல் பல சாகசங்களை இந்த பலூன்கள் வாயிலாக ஜப்பான் தேசம் அரங்கேற்றி இருக்கிறது. அதன் பிறகு நவீன விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் வந்த பிறகு பலூன்கள் வரவேற்பிழந்தன. ஆராய்ச்சி உள்ளிட்ட இதர நோக்கங்களுக்காகவே அவை பயன்படுத்தப்பட்டு வந்தன.

அமெரிக்க வான் பரப்பில் சீன உளவு பலூன்
அமெரிக்க வான் பரப்பில் சீன உளவு பலூன்

மேலும், எதிரி தேசங்களை ஊடுருவவும், நோட்டமிடவும் அதி நவீன செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவி வேவு பார்க்கும் காலம் இது. இதன் மூலம் எந்த நாடும் அதன் பகை அல்லது சந்தேக தேசங்களை வரைமுறையின்றி உளவு பார்க்க முடியும். உக்ரைன் எல்லையில் பல மாதங்களாக படிப்படியாக குவிக்கப்பட்ட ரஷ்ய துருப்புகளை, செயற்கைக்கோள் வாயிலாக அமெரிக்காவே முதலில் கண்டு உலகுக்கு சொன்னது. முதலில் அதனை மறுத்த ரஷ்யா, ஆதாரங்கள் வெளியானதும் பயிற்சி நடவடிக்கை என பம்மியது. கடைசியில் அமெரிக்க செயற்கைக்கோள்கள் கண்டு சொன்னதே உண்மையானது.

இம்மாதிரி நவீன செயற்கைக்கோள்கள் இருக்க, அமெரிக்காவை உளவு பார்க்க சீனா பலூன்களை பயன்படுத்தியது பல்வேறு தரப்பிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆம், சந்தேகமே இன்றி இது அமெரிக்காவை சீண்டும் நடவடிக்கைதான். தைவானுக்கு ஆதரவான அமெரிக்காவின் அதிகாரபூர்வ நடவடிக்கைகள், மற்றும் தென்சீனக்கடலில் அமெரிக்காவின் அணு ஆயுதக் கப்பல்களின் கண்ணாமூச்சி ஆட்டங்கள் இவற்றால் வெறுப்படைந்திருக்கும் சீனா, அமெரிக்காவை சீண்டி பதிலடி தரப்பார்க்கிறது.

அதே வேளையில், இந்த சீண்டல் எந்த வகையிலும் சீனாவுக்கு எதிரானதாகவோ, உலகப்போர் அளவுக்கு தீவிரமடையவோ கூடாது என்பதில் சீனா தீர்மானம் கொண்டது. இதன் அடிப்படையில் உளவு பலூன்களை கையில் எடுத்தது. தலைமுறைகள் பிந்தைய பலூன்கள் என்ற போதும் அதில் நடப்பு நவீன நுட்பங்களை புகுத்தியிருக்கிறது. மேலும் பலூன்களின் இயல்பையே தனது சாதகமாகவும் பயன்படுத்த முடிவு செய்தது.

வழக்கமான பயணிகள் மற்றும் போர் விமானங்களைக் காட்டிலும் 2 முதல் 3 மடங்கு உயரத்தில் இந்த பலூன்கள் பறக்கக் கூடியவை. இந்த உயரம் சராசரியாக 25 கிமீக்கு மேல் அமைந்திருக்கும். இதனால் வழக்கமான ட்ரோன்கள் மற்றும் உளவு விமானங்கள் அளவுக்கு ரேடார்களில் சிக்குவது கடினம். மேலும் அதி நவீன உளவு கேமராக்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை இந்த பலூன்கள் கொண்டிருக்கும். 3 பேருந்துகளை கொள்ளும் அளவுக்கு பெரிதான இந்த பலூன்கள் ஹீலியம் வாயிலான வெப்ப வாயு மூலம் செலுத்தப்பட்டாலும், சூரிய சக்திக்கான தகடுகளும் பொறுத்தப்பட்டிருக்கும்.

வானில் பறந்து செல்பவை என்பதைக் காட்டிலும் தவழ்ந்து செல்லும் இயல்பைக் கொண்டவை. அதாவது ஓரிடத்தை கடக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் உளவு ட்ரோன்கள் முதல் செயற்கைக்கோள்கள் வரையிலான உபாயங்களைவிட, ஓரிடத்தை நின்று நிதானமாக உளவு பார்க்க உதவக்கூடியவை. செயற்கைக்கோள்களின் உளவையும் அவற்றின் வட்டப்பாதை மட்டுமே தீர்மானிக்கும். பலூன்களுக்கு அந்தக் குறைபாடு கிடையாது. மேலும் சீனா தற்போது வரிந்துகட்டும், வானிலை ஆய்வு என்ற போர்வையும் பலூன்களுக்கு கிடைக்கும்.

இந்த பலூன்கள் வழிதடுமாறுவதும் இயல்பாக நடக்கும் என்ற போதிலும், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக அதன் பாதையை தொலை தேசங்களில் இருந்தும், செயற்கைக்கோள் வாயிலாகவும் தீர்மானிக்கவும் முடியும். அமெரிக்கா தற்போது அதனை சுட்டு வீழ்த்தியதற்கு சீனா வெகுண்டு கண்டனம் தெரிவிப்பது கூட நாடகமே. இந்த சம்பவத்தில் அமெரிக்காவைவிட இந்தியா அதிகம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. இம்மாதிரி இந்திய ரேடார்களின் கண்களில் மண்ணைத்தூவி, இந்திய வான் பரப்புக்குள் சீனா எத்தனை பலூன்களை பறக்கவிட்டதோ, என்னென்ன உளவுகளை சேகரித்ததோ என்று தெரியவில்லை. இந்திய கடற்பரப்பில் சீன உளவுக் கப்பல்கள் ஆங்காங்கே உலவியதன் பின்னணியிலும் இந்த உளவு பலூன்கள் மற்றும் அதற்கு இணையான நோட்டங்கள் இருந்திருக்குமோ என்ற கவலை எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in