சிறப்பு மாநில அந்தஸ்தை ஏன் கோருகிறது பிஹார்?

சிறப்பு மாநில அந்தஸ்தை ஏன் கோருகிறது பிஹார்?

பிஹார் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பிஹார் மாநில முதலமைச்சருமான நிதீஷ் குமார், 2005 முதல் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். மத்திய அரசு சாதகமான பதிலை இதுவரை கூறவும் இல்லை, நடவடிக்கை எடுக்கவும் இல்லை. பிஹார் மட்டுமல்ல தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திர மாநிலமும்கூட இந்தச் சிறப்பு அந்தஸ்தைக் கோருகிறது.

இப்போதுள்ள நிலைப்படி, மத்திய அரசின் திட்டங்களுக்காகும் செலவை மத்திய அரசு 60 சதவீதம் மாநில அரசு 40 சதவீதம் அல்லது இரண்டுமே சமமாக 50 சதவீதம் என்று பகிர்ந்துகொள்கின்றன. சிறப்பு அந்தஸ்து தரப்பட்டால் மத்திய அரசின் பங்களிப்பு 90 சதவீதமாகவும் மாநிலப் பங்களிப்பு 10 சதவீதமாகவும் இருக்கும். இதனால், மாநில அரசு தன்னுடைய நிதி ஆதாரத்தை, தேவைப்படும் பல முக்கிய இனங்களுக்கு அதிகம் செலவிட முடியும். இதனால் பிஹாரின் வளர்ச்சி வேகப்படும்.

சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலங்களில் செய்யப்படும் தொழில் முதலீடுகளுக்கு வரி விலக்குகளும் கிடைக்கும். இதனால் தனியாரும் வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களுடைய முதலீடுகளை பிஹாரை நோக்கித் திருப்புவது அதிகரிக்கும். அது மட்டுமின்றி மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி (கலால் வரி - எக்சைஸ்) குறைக்கப்படும். பிஹார் மாநிலம் செலுத்த வேண்டிய கடன்களையும் மத்திய அரசு குறைக்க முடியும். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பிஹார் மாநிலத்துக்கு தனி முன்னுரிமை தர முடியும். இவையெல்லாம் தனி அந்தஸ்து வழங்கப்பட்டால் மட்டுமே சாத்தியம்.

நிதீஷின் இந்தக் கோரிக்கையை பிஹார் மாநில சட்டப்பேரவை 2006-ல் ஒரு மனதான தீர்மானம் மூலமும் மத்திய அரசுக்குத் தெரிவித்தது. பிஹாரின் கோரிக்கையை ஏற்றால், மேலும் பல மாநிலங்களும் இப்படிப்பட்ட கோரிக்கைகளுடன் வரும் என்று மத்திய அரசு தயங்குவது ஒரு காரணம். இனி, எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து தரக்கூடாது என 14-வது நிதிக் குழு பரிந்துரைத்திருப்பதும் முக்கியக் காரணம். வடகிழக்கு மாநிலங்களுக்கும் மூன்று மலை மாநிலங்களுக்கும் அவற்றின் அமைவிடம் காரணமாக, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

சமூக, பொருளாதாரக் காரணங்களைவிட அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இந்தச் சலுகையைத் தனக்கு வேண்டிய அல்லது தன்னுடைய கட்சி அல்லது கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் மக்களிடம் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அதே வேளையில் பிஹாருக்குள், நிதீஷ் குமார் தனி அந்தஸ்து கேட்டாரே, கிடைத்ததா என்று தேர்தல் பிரச்சாரங்களின்போது கேலி செய்யவும் தவறாது.

ஒரு காலத்தில் தேசிய வளர்ச்சிப் பேரவை (என்டிசி), சிறப்பு அந்தஸ்து வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தது. இது பிரதமர் தலைமையிலான அமைப்பு. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் உறுப்பினர்கள். இப்போது தேசிய வளர்ச்சிப் பேரவை இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு அதன் செயல்பாடு இருக்கிறது.

2004-05 நிதியாண்டின்போது பிஹார் மாநில நபர்வாரி வருமானம் ஆண்டுக்கு 7,914 ரூபாயாக இருந்தது. 2019-20-ல் இது 50,735 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஆனால். தேசிய சராசரி ஆண்டு வருமானமோ 2019-20-ல் ரூ.1.34 லட்சம். பிஹாரில் அது 40 சதவீத அளவுக்குத்தான் இருக்கிறது. இந்த அளவுக்குத்தான் மாநில முயற்சியால் எட்ட முடிந்திருக்கிறது. எனவேதான் சிறப்பு அந்தஸ்து கோருகிறார் நிதீஷ்.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதைவிட, பிஹாரின் நிலைமையைக் கருதி இந்தக் கோரிக்கையை ஏற்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்துச் செயல்படலாம். நிதீஷ் குமாரால் பிரதமரின் கவனத்தை ஈர்க்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in