மாடு யாருக்கு சொந்தம்? காவல்நிலையத்திற்கு சென்ற புகார்... போலீஸார் வழங்கிய சுவாரஸ்ய தீர்ப்பு!

எருமை மாட்டுடன் பழனிவேல்
எருமை மாட்டுடன் பழனிவேல்

எருமை மாடு என்னுடையது என்று இருவருக்கிடையே நடந்த உரிமைப் போராட்டத்தில் எருமை மாட்டின்  முடிவே இறுதியானதாக கருதி காவல்துறையினரால் தீர்ப்பளிக்கப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவருக்கு சொந்தமான எருமை மாடு ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருடு போனது. பல இடங்களிலும் மாட்டைத் தேடி அலைந்த தீபா, தனது எருமை மாட்டை, பழஞ்சநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் பிடித்து வைத்திருப்பதாக காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் பழனிவேலுவை மாட்டுடன் அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால், பழனிவேலோ,  இந்த மாட்டை தனது உறவினரிடமிருந்து  பல மாதங்களுக்கு முன்பே வாங்கி வந்து  வளர்த்து வருவதாக கூறினார்.  ஆனால் தீபா அது தன்னுடைய மாடு என்று பிடிவாதமாக இருந்தார்.

 இதனால் போலீஸார் குழப்பமடைந்த நிலையில் முடிவை மாட்டிடமே விட்டு விடுவது என தீர்மானித்தனர். 

மாட்டுடன் தீபா
மாட்டுடன் தீபா

அதனால் இருவரையும் மாட்டுக்கு அருகில் செல்ல வைத்து மாடு யாரிடம் அதிக பாசம் காட்டுகிறது என கண்காணித்தனர். அதன்படி முதலில் தீபா மாட்டிடம் சென்று தடவிக் கொடுத்து பாசம் காட்டினார். மாடும் அவரோடு இணக்கமாக நின்றது.

அதன் பின்னர் பழனிவேல் மாட்டிடம் சென்று தடவிக் கொடுத்தபோது அவரிடமும் அதே அளவு பாசம் காட்டியது. இதனால் போலீஸார் மேலும் குழம்பினர். அதன் பின்னர்  பழனிவேல் தூரமாகச்  சென்று அங்கிருந்து மாட்டிற்கு சைகை காட்டினார். அதைப் பார்த்த மாடு அவருடன் சென்றது. இதனால் மாடு அவருக்கே சொந்தம் என்று போலீஸார் தீர்ப்பு வழங்கினார். இதனால் புகார்தாரர் தீபா விரக்தியுடனும், ஏமாற்றத்துடனும் திரும்பிச் சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in