பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் வரும் 3-ம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் உடன் ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ பச்சரிசியும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெறவில்லை. இதனால் பொங்கல் தொகுப்புடன் கரும்புவை வழங்கக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதாக முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு பிறகு விவசாயிகள், கரும்பு சாகுபடியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் தொடர்ந்து வைத்த வேண்டுகோளை முதல்வர் பரிசீலித்து விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை போக்கும் வகையில் பொங்கல் தொகுப்போடு ஒரு முழு கரும்பை வழங்கும்படி அறிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் அதற்கான பணிகளை வேளாண் துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்ந்த அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் கண்காணிப்பு குழுவினை அமைப்பு அவைகளை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட இருக்கின்றோம்.

இந்த திட்டத்தை ஜனவரி 2-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பதாக இருந்தது. தற்போது முழு கரும்பு கொடுக்கப்பட உள்ளதால் இந்தத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டு ஜனவரி 9-ம் தேதி முதல்வர் பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பையும் வழங்க உள்ளார். அதைத்தொடர்ந்து அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். நியாயவிலை கடைகளுக்கு ஒரே நேரத்தில் பொதுமக்கள் செல்வதால் பல சிரமங்கள் ஏற்படும் என்ற காரணத்தினால் வரும் 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும். அதன்பிறகு முதல்வர் வரும் 9-ம் தேதி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in