கெலாட்டுக்கு இல்லை தலைவர் பதவி: அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைமை அடுத்து முன்னிறுத்தப்போவது யாரை?

கெலாட்டுக்கு இல்லை தலைவர் பதவி: அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைமை அடுத்து முன்னிறுத்தப்போவது யாரை?

சோனியா காந்தி குடும்பம் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸின் அடுத்த தலைவராக வாய்ப்பில்லை எனத் தெளிவாகிவிட்டது. இதையடுத்து, கட்சியின் அடுத்த தலைவராக சோனியா குடும்பம் யாரை முன்னிறுத்தும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

அக்டோபர் 17-ல் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சோனியா காந்தி குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்ற அசோக் கெலாட்டுக்கே அடுத்த தலைவர் பதவி என்று பேச்சுக்கள் எழுந்தன.

ஆனால், அவரோ காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றாலும் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. குறிப்பாக, முதல்வர் பதவியைக் குறிவைத்துக் காத்திருக்கும் சச்சின் பைலட்டுக்குப் பதவி சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். மறுபுறம், 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் சச்சின் பைலட் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால்தான் காங்கிரஸ் வெற்றிபெறும் என அவரது ஆதரவாளர்கள் பேசிவந்தனர். ஒருவேளை அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராகிவிட்டால், சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் நம்பியிருந்தனர். இதற்கிடையே, அசோக் கெலாட் காட்டிய பிடிவாதத்தால் அதிருப்தியடைந்த ராகுல் காந்தி ‘ஒரு நபர் ஒரு பதவி’ எனத் தீர்மானிக்கப்பட்டதை அவருக்கு நினைவூட்டினார்.

இதற்கிடையே, அசோக் கெலாட்டுடன் இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஞாயிற்றுக்கிழமை (செப்.25) ராஜஸ்தான் சென்ற மூத்த தலைவர்களான அஜய் மாக்கன், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அசோக் கெலாட்டின் இல்லத்தில் கூடி இதுகுறித்துப் பேச காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 20 சொச்சம் எம்எல்ஏ-க்கள்தான் அங்கு வந்தனர்.

மற்றவர்கள், அசோக் கெலாட்டுக்கு நெருக்கமான அமைச்சரான சாந்தி தரிவாலின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து சபாநாயகர் இல்லத்துக்கு ஒரு சிறப்புப் பேருந்தில் சென்ற அவர்கள், அசோக் கெலாட்டுக்குப் பதிலாக சச்சின் பைலட்டை முதல்வராகத் தேர்ந்தெடுத்தால் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் தலைவர் யார் எனத் தீர்மானிக்கப்பட்ட பின்னரே ராஜஸ்தான் முதல்வர் யார் எனத் தீர்மானிக்க வேண்டும் என்று கடுமை காட்டிய அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள், அஜய் மாக்கன், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைச் சந்திக்கவும் மறுத்துவிட்டனர். இது காங்கிரஸ் தலைமையைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்னரும், இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறினார் அசோக் கெலாட். பாகிஸ்தான் எல்லையில் உள்ள புனிதத் தலம் ஒன்றுக்குச் சென்றிருந்ததாகவும், அங்கு செல்போன் சிக்னலே கிடைக்காது என்றும் கூறி சமாளித்தார். “என் கையில் எதுவும் இல்லை. எம்எல்ஏ-க்கள் கோபமாக இருக்கிறார்கள்” என்று விளக்கமளித்தார். கட்சித் தலைவராகிவிட்டால் ராஜஸ்தான் முதல்வர் பதவி தனக்குப் பிறகு யாருக்கு எனத் தீர்மானிக்கும் அதிகாரம் கிடைத்துவிடும் என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைமை அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை விலக்கிக்கொண்டுவிட்டது. குறிப்பாக, காங்கிரஸுக்கு வலு சேர்க்க, ஒற்றுமை இந்தியா பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் காலகட்டத்தில் கட்சிக்குள் இப்படியான குழப்பத்தை ஏற்படுத்திய அவர் மீது கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் உருவாகியிருக்கிறது.

இந்தச் சூழலில், இனி அவருக்கு சோனியா காந்தி குடும்பம் ஆதரவளிக்காது என்பது உறுதியாகிவிட்டது. அடுத்ததாக மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங், கமல் நாத் போன்றோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in