இந்திய இருமல் மருந்துக்கு எதிராக, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

குழந்தைகளின் உயிரைப் பறித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான இருமல் மருந்துகள்
குழந்தைகளின் உயிரைப் பறித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான இருமல் மருந்துகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நொய்டவை சேர்ந்த மரியோ பயோடெக் மருந்து நிறுவனம் பல்வேறு மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்புகள் அதிகளவில் இந்தியாவுக்கு வெளியே பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பான குழந்தைகளுக்கான இருமல் மருந்தினை உட்கொண்ட குழந்தைகள் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து அந்த மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் வெளிநாடுகளில் புகார்கள் எழுந்தன. அவை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தயாராகும் மருந்துப் பொருட்கள் மீதான நம்பகத் தன்மையை பாதித்தன. இதனையடுத்து இந்திய அரசின் சார்பிலும், வெளிநாடுகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட இருமல் மருந்துகளின் மாதிரிகளை பெற்று, அவற்றில் ஆய்வக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த மருந்துகளில் மரியோ பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான AMBRONOL மற்றும் DOK-1 Max ஆகிய இருமல் மருந்துகளால், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 19 குழந்தைகள் பலியாகி உள்ளனர். அங்குள்ள மருந்தகங்கள் உடனடியாக இந்த இருமல் மருந்துகளை இருப்பிலிருந்து நீக்கின. புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து மரியோ பயோடெக் நிறுவனமும், குறிப்பிட்ட மருந்துப் பொருட்களின் உற்பத்தியை நிறுத்தியது.

இதற்கிடையே உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைக் குறிப்பு ஒன்று, மரியோ பயோடெக் நிறுவனத்தின் குறிப்பிட்ட இரு இருமல் மருந்துகளின் உபயோகத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது. குழந்தைகள் பயன்பாட்டுக்கான இந்த மருந்துகளில் டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகிய உட்பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காணப்படுவதாகவும், ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in