’மாட்டிறைச்சி சாப்பிட்டோரும் இந்து மதத்துக்கு திரும்பலாம். அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன’ என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
அசைவம் உண்பது மற்றும் மதமாற்றம் தொடர்பான விவாதங்கள் அண்மைக்காலமாக ஆர்எஸ்எஸ் முகாம்களில் அதிகம் எதிரொலித்து வருகின்றன. அண்மையில் ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகியான ஜே.நந்தக்குமார், ‘இந்தியாவில் அசைவம் உண்பது குறித்தான விலக்கல் அவசியமில்லை. அசைவ உணவை தடைசெய்யவும் தேவையில்லை. ஆனால் அந்த அசைவம் மாட்டுக்கறியாக இருக்கக்கூடாது’ என்றார். இதே போன்று கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், அதற்கான எதிர்ப்புகள் மற்றும் தாய் மதம் திரும்புவோரை வரவேற்பது உள்ளிட்டவையும் ஆர்எஸ்எஸ் முகாம்களில் தற்போது அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்திருக்கும் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.
“இந்தியாவில் வாழ்வோர், தங்கள் மூதாதையர்களை இந்துவாகக் கொண்ட அனைவருமே இந்துக்களே. ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான கோல்வால்கர், மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பலாம் என தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலும், மதம் மாறியவர்களுக்காக இந்து மதத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. மதம் மாறியவர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு மாட்டிறைச்சி உண்ண நேர்ந்திருப்பார்கள். அதற்காக அவர்களுக்கான கதவுகள் அடைபட்டிருக்கவில்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு ஏதுவாக இந்து மதத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” என்று தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்திருப்பது ஆர்எஸ்எஸ் முகாமுக்கு உள்ளேயே ஆச்சரியங்களை ஏற்படுத்தி உள்ளது.