
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 84.4 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதன் காரணமாக அதானி இப்போது உலகின் 11வது பணக்காரராக சரிந்துள்ளார் என்று புளூம்பெர்க் தெரிவித்துள்ளது
உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் கௌதம் அதானி இந்த முறை இடம்பெறவில்லை. புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் நான்காவது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு அதானி சரிந்துள்ளார். கடந்த மூன்று வர்த்தக நாட்களில் கௌதம் அதானியின் தனிப்பட்ட சொத்து 34 பில்லியன் டாலர் குறைந்தது. அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் அவர் அந்த பட்டியலில் இன்னும் பின்னடைவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் அதானி தற்போது 84.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11 வது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி 82.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 12ம் இடத்தில் உள்ளார்.
புளூம்பெர்க் தற்போது வெளியிட்டுள்ள உலகப்பணக்காரர்கள் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் 189 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் முதல் பணக்காரராக உள்ளார். அவரைத் தொடர்ந்து எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ், வாரன் பஃபெட், லாரி எலிசன், லாரி பேஜ், ஸ்டீவ் பால்மர், செர்ஜி பிரின் மற்றும் கார்லோஸ் ஸ்லிம் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.