மன்னாரில் வலைகளில் சிக்கிய 47 கடற்பசு, டால்பின்கள்: விடுவித்த மீனவர்களுக்கு வெகுமதி

கடற்பசுக்கள்
கடற்பசுக்கள் மன்னாரில் வலைகளில் சிக்கிய 47 கடற்பசு, டால்பின்கள்: விடுவித்த மீனவர்களுக்கு வெகுமதி

மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கும் போது வலைகளில் சிக்கிய 47 அரிய வகை  கடல் உயிரினங்கள் மீட்கப்பட்டன. அவற்றை விடுவித்த மீனவர்களுக்குப் பாராட்டுடன் வெகுமதியும் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடலில் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என சுழற்சி முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. மீன்பிடியின் போது வலைகளில் சிக்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை விடுவிப்பது குறித்து மீனவர்களுக்கு வனத்துறை சார்பில்  ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மீன்பிடி வலைகளில் கடந்த 6 மாதங்களில்  சிக்கிய 3 கடற்பசு, 7 டால்பின், 2 திமிங்கலம், 23 கடல் ஆமைகளை  மீட்கப்பட்டு  கடலில் மீண்டும் விடப்பட்டுள்ளன. அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை மீட்ட47 மீனவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடற்பசு, டால்பின்களை மீட்டு விடுவித்த மீனவருக்கு தலா ரூ.10 ஆயிரம், கடல் ஆமைகளை மீட்டு விடுத்த மீனவருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் தமிழக வனத்துறை சார்பில்  வெகுமதி வழங்கப்பட்டது. கடற்பசுக்களை  மீட்டு விடுவித்த மீனவருக்கு இந்திய கடல்வாழ் உயிரின நிறுவனம் சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. தமிழக வனத்துறை , இந்திய கடல்வாழ் உயிரின நிறுவனம் சார்பில் வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் வெகுமதி வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in