இன்று முழு சந்திர கிரகணம்: எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்?

இன்று முழு சந்திர கிரகணம்: எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்?

இன்று முழு சந்திர கிரகணம். இந்தியாவில் வெறும் கண்ணால் சந்திர கிரகணத்தை  பார்க்க இயலும் என்றாலும் முழு கிரகணத்தையும் எல்லா இடங்களிலும் முழுமையாக  பார்க்க இயலாது. 

சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும்போது ஏற்படுவது. சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, அதாவது  சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது ஏற்படும்.

முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும். இன்று  ( நவ.8 )  முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க இயலாது . ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ  நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண முடியும்.

இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தென்படும். 

இந்தியாவின் கிழக்கு பகுதிக்குச் செல்லச்செல்ல சந்திர கிரகணத்தை நன்கு பார்க்க இயலும். இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் அந்தி சாயும்போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் சென்னையில், சந்திரன் உதிக்கும் நேரம் இந்திய நேரப்படி 5 மணி 39  நிமிடங்கள். அதிலிருந்து சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காண முடியும்.

சந்திர கிரகண நேரம்

சந்திரனின் புறநிழல் பகுதி தொடக்கம்: மதியம் 1:30:16

சந்திரனின் கருநிழல் பகுதி தொடக்கம் மதியம் 2:38:33

முழு சந்திர கிரகணம் தொடக்கம் மதியம் 3:45:57

முழு சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் மாலை 4:18:49

முழு சந்திர கிரகணம் முடிவுறும் நேரம் மாலை 5:11:40

சந்திர கிரகணம் கரு நிழல் பகுதி விலகல்: மாலை  6:19:03

சந்திர கிரகணம் புற நிழல் பகுதி விலகல் இரவு 7:27:29

கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது ?

வெள்ளை ஒளிக்குள் ஏழு நிறங்கள் உள்ளன. அதில் நீல ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச்சிதறல் அடைகிறது, இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது. அதேபோல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகள் அடைகிறது. அது நிலவின் மீது படுகிறது, இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாக காணப்படுகிறது.

சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பதால், சிறப்பு உபகரணங்கள் ஏதும் தேவையில்லை. நிலாவின் அழகைக் கண்டு ரசிக்கலாம். 

இந்தியாவில்  அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று பார்க்க முடியும். ஆனால், அது பகுதி சந்திர கிரகணம் தான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in