மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரதேச பரிசோதனை செய்வதில் தாமதம்: ஏன்?

சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி
சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி

சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதியன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், அவர் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோரும் கூறிவந்த நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். தகுதியான மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை, அதனால் ஏற்கெனவே நடைபெற்ற பிரேத பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மாணவியின் பெற்றோர் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜீலியான் ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலநாதன் மற்றும் தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநர் சாந்தகுமாரி ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

ஆனால், தங்கள் சார்பிலும் ஒரு மருத்துவர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டுமென்று மாணவியின் பெற்றோர் கூறியிருந்தனர். அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. அதனால் மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, இன்று காலை அரசு சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த மருத்துவர்கள் அனைவரும் இன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். மருத்துவமனையை முற்றிலுமாக தனது கட்டுப்பாட்டில் காவல்துறை எடுத்துக் கொண்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு வருகை தந்த அனைவரும் பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மாணவியின் உடலை பிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க மறுத்து விட்டனர். பிரேத பரிசோதனை நடத்தவும் அனுமதித்து உத்தரவிட்டனர்.

எனினும் உடனடியாக திட்டமிட்டபடி பிரேத பரிசோதனை நடத்த முடியவில்லை. மாணவியின் தந்தை மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் உடன் இருக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் அவர்களின் வருகைக்காக மருத்துவமனை தரப்பில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்கள் சென்னையில் இருப்பதால் இன்று மதியத்திற்கு மேல் அங்கிருந்து வந்து சேர்ந்தபிறகே பிரேத பரிசோதனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட இருப்பதால் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in