புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எப்போது? - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதில்

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் புதுச்சேரி மக்களுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கிறது என்பதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடந்த இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கேக் வெட்டினர்.

தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சியினால் புதுச்சேரி வளர்ச்சிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதனால் எதிர்கட்சிகள் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை. சுகாதாரப்பணிகள் குறித்துத் தொடர்ந்து முதல்வருடன் பேசி உள்ளேன்.

கரோனாவிற்கு மூக்கு வழியாகச் செலுத்தும் சொட்டுமருந்து புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் நசுக்கப்படுகிறது என்பது தேவையற்ற, ஆதாரமற்றக் குற்றச்சாட்டு. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் தமிழை படிக்கலாம். கடந்த பத்து வருடங்களாக தமிழை ஏன் கட்டாயப் பாடம் ஆக்கவில்லை என உயர்நீதிமன்றம் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்கள் நலன்சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் நடக்கிறது. மாநில அந்தஸ்து கோரிக்கை பல ஆண்டுப் பிரச்சினை. அதை உடனே சரிசெய்துவிட முடியாது. எம்.பியாக இருந்தவர்கள் பாராளுமன்றத்தில் இதைப்பற்றி எத்தனை முறை பேசியிருக்கிறார்கள்? பாராளுமன்றத்தில் விவாதித்து அங்கு அனுமதிபெறவேண்டும். இது அரசியலுக்காக சொல்லப்படுகிறது.

நாங்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம். ஆனால் தமிழகத்தின் முதல்வர் இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில்லை என்ற ஆதங்கமும் எனக்கு உள்ளது.”என்றார் அவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in