சாத்தான்குளம் கொலை வழக்கு எப்போது முடியும்?: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் கொலை வழக்கு எப்போது முடியும்?:  அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என விசாரணை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2 ஆண்டுக்கு முன்பு காவல்துறையினரின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்தனர்.

தந்தை, மகனை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை கைது செய்தது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை விரைவில் முடிக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் சாத்தான்குளம் வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது. பின்னர் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் செல்வராணி மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், வழக்கில் 105 சாட்சிகள் உள்ளனர். இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், " இதுவரை எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும்? விசாரணையை முடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் " என உத்தரவிட்டு விசாரணையை ஆக.29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in