தீபாவளி அன்று எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்?- கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு!

தீபாவளி அன்று எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்?- கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு!

தீபாவளி அன்று எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசுதான். அதே நேரத்தில் பட்டாசு வெடிக்கும் மக்களால் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு வெடிக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி காலையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று விதித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குடிசை பகுதிகளில் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்றால் கிடையாது. கிராமப்புறங்களில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருக்கும் சூழ்நிலை தான் இருக்கிறது. மேலும் நகர்ப்புறங்களில் தமிழக அரசு அனுமதித்த நேரத்தைவிட பட்டாசுகள் வெடிக்கும் காட்சியைத்தான் பார்க்க முடியும். இதனை கண்காணிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆலோவலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in