‘பெற்ற தந்தையால் பாதிக்கப்பட்டேன்’ -குஷ்பூ வரிசையில் சீறும் ஸ்வாதி!

ஸ்வாதி மாலிவால்
ஸ்வாதி மாலிவால்

பெற்ற தந்தையால் பாதிப்புக்கு ஆளானது குறித்து அண்மையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பூ பகிரங்கமாக பேசியதை அடுத்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி அதே போன்ற அனுபவத்தை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியாக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இவர் பொறுப்பில் அமர்ந்தது முதல்,டெல்லியில் நடந்த பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றச்செயல்களில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார். தற்போது தலைநகரில் பரபரப்பாகி இருக்கும், ஜப்பானிய பெண் சுற்றுலாப் பயணி மீதான ஹோலி கொண்டாட்டத்தின் பெயரிலான அத்துமீறலை கண்டிக்கும் வகையிலும் விசாரணை கோரியிருக்கிறார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் வகையில், இன்று(மார்ச் 11) டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் ஸ்வாதி மாலிவால் பங்கேற்று பேசினார். அப்போது தனது பால்யத்தில், பெற்ற தந்தையால் பாதிப்புக்கு ஆளானது குறித்து அவர் பகிரங்கப்படுத்தினார்.

“நான்காம் வகுப்பு படிக்கும் வரை பெற்ற தந்தையின் பாலியல் ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொண்டேன். குழந்தை என்றும் பாராது என்னை அடிக்கடி துன்புறுத்துவார். கண்ட இடத்தில் அடிப்பதோடு, சடையைப் பிடித்து சுவற்றில் மோதுவார். அவர் வருகிறார் என்றாலே கட்டிலுக்குள் சென்று ஒளிந்துகொள்வேன். என்னுடைய குழந்தைப் பருவம் அந்தளவுக்கு மோசமானது. அப்போதெல்லாம், பெண்களையும், குழந்தைகளையும் மோசமாக நடத்தும் ஆண்களுக்கு எப்படி பாடம் கற்பிப்பது என்று யோசித்திருக்கிறேன். அதன்படியே இன்று அவற்றை நடைமுறையில் செய்து வருகிறேன்” என்ற ஸ்வாதி மாலிவால், கடந்த வருடங்களில் டெல்லி மகளிர் ஆணையத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட மகளிர் நலன்நாடும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

அண்மையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்பூ, குழந்தைப் பருவத்தில் தனது தந்தையால் மோசமாக நடத்தப்பட்டது குறித்து பகிரங்கமாக வேதனை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் ஆணையத்தின் டெல்லி தலைவி ஸ்வாதி, அதே போன்ற கசப்பனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in