
மதுரை மாநகராட்சி ஆணையர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன். இவரின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்டு மாநகராட்சி உதவி ஆணையர்கள், மண்டலத் தலைவர்களின் தொலைபேசி எண்ணுக்கு ஜி பேயில் பணம் கேட்டும், அமேசான் கிஃப்ட் கார்டு கேட்டும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து அலுவலர்கள் ஆணையரை நேரில் சந்தித்து போலி வாட்ஸ்அப் கணக்கு குறித்து தெரிவித்தனர். ஒருசிலர் பணம் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இது குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் காவல்துறையினர் தொலைபேசி எண் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் இக்குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டு வட மாநிலப் பெண்ணை தேடி வருகின்றனர்.