
வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிரப்படும் பதிவுகள் அந்தக் குழுவின் அட்மினை அதிகம் பாதிக்கும் என்பதற்கு தேனி மாவட்ட காவல்துறை கையில் எடுத்திருக்கும் சைபர் க்ரைம் விசாரணையே உதாரணம்.
வாட்ஸ் ஆப் குரூப் என்பது தகவல்தொடர்பின் நவீன அம்சமாக உதவி வருகிறது. ஆனால் அவற்றை அலட்சியமாக கையாளும் சிலரால், குழுவை நிர்வகிக்கும் அட்மினுக்கு தலைவலியாகவும் மாறக்கூடும். ஆபாசம், அரசுக்கு எதிரான கருத்துக்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவை, பயங்கரவாத பின்னணிக்கு ஆதரவளிப்பவை உள்ளிட்டவற்றை பதிவதோ, பகிர்வதோ சட்டபூர்வமான நடவடிக்கைக்கு ஆளாக்கும்.
வாட்ஸ் ஆப் குழுக்களைப் பொறுத்தவரை இம்மாதிரி தவறிழைப்பவர்களைக் காட்டிலும், அந்த குழுவின் அட்மினாக செயல்படும் நிர்வாகிகளே உடனடி விசாரணைக்கு ஆளாகிறார்கள். அதற்கு இந்த தேனி மாவட்ட சைபர் க்ரைம் வழக்கு ஓர் உதாரணம். தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் வசிப்போர் சிலரை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழு ஒன்று ’ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர்’ என்ற தலைப்பில் செயல்பட்டு வருகிறது.
இரங்காவலரில் வசிக்கும் விஸ்வநாதன் என்பவர் இந்த வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினாக இருக்கிறார். குழுவில் சுமார் 141 அங்கத்தினர்கள் உள்ளனர். தேனி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து விஸ்வநாதனுக்கு தற்போது, போலீஸ் விசாரணக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர் என்ற பெயரில் இயங்கி வரும் வாட்ஸ் ஆப்குழுவில் 15.02.2023 அன்று பகிரப்பட்டுள்ள சில தகவல்கள் சைபர் க்ரைம் குற்றத்திற்குள் வருவதால், செல்ப்போன் மற்றும் பதிவுகளுடன் ஆஜராகுமாறு’ அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் குழுவில் உள்ள 141 உறுப்பினர்களையும் மேற்படி விசாரணை முடியும் வரை நீக்காதிருக்கவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எதற்காக அழைத்திருக்கிறார்கள், அந்த விவகாரம் என்ன என்பதை தனியாக பார்ப்போம். மற்றபடி, இம்மாதிரி காவல்துறை விசாரணைக்கு தயாராக இருப்போர் மட்டுமே வாட்ஸ் ஆப் குழுக்களில் முறையற்ற பதிவுகளை பகிரலாம். குறிப்பாக, குழுவில் எவரோ பதிவிடும் தகவல்கள் அல்லது படம்/வீடியோக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு, குழு அட்மின் பொறுப்பாளி ஆகிறார் என்பதும் இந்த காவல்துறை நடவடிக்கையில் புலனாகிறது.