152 நாளாக பரந்தூரில் நடப்பது என்ன?- ட்விட்டர் கணக்கை தொடங்கியது விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பு

152 நாளாக பரந்தூரில் நடப்பது என்ன?- ட்விட்டர் கணக்கை தொடங்கியது விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பு

பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய ட்விட்டர் கணக்கை விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் தொடங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது. விமான நிலையம் அமைப்பதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 152-வது நாளாக இன்று அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் குளிரிரையும் பொருட்படுத்தாமல் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் வரை அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் பரந்தூர் பகுதியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களின் விவரங்களும் அதில் போடப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in