'எது நடந்தாலும் நாங்க பொறுப்பு கிடையாது’: மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து கேட்கும் தனியார் பள்ளி!

'எது நடந்தாலும் நாங்க பொறுப்பு கிடையாது’: மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து கேட்கும் தனியார் பள்ளி!

பள்ளியில் இருக்கும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று மாணவர்களின் பெற்றோர்களிடம் கோவையில் உள்ள ஒரு பள்ளி கடிதம் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள சக்தி பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர், உறவினர்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டதுடன், பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிக்கு அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என கட்டாயப்படுத்தி கடிதம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, கோவை அவிநாசி சாலையில் ஜிஆர்டி பப்ளிக் பள்ளியில் இப்படி கடிதம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. அந்த கடிதத்தில், "எங்கள் பள்ளியின் உடைமைகள் மற்றும் எந்தவொரு நபருக்கும், இழப்பு அல்லது காயம் தொடர்பாக எந்த உரிமை கோரலையும் செய்ய மாட்டோம் என ஒப்புக்கொள்கிறேன். மாணவர்கள் பள்ளியின் காவலில் இருக்கும்போது ஏதாவது பிரச்சினை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன் ” என பெற்றோரிடம் ஓர் இழப்பீட்டு பத்திரத்தில் (Indemnity Bond) கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

அப்படி கையெழுத்து போடவில்லை என்றால், மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு செல்லுமாறு வற்புறுத்துவதாகவும் பல மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பில், "கோவையில் உள்ள பல பள்ளிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றன. அந்த ஒப்பந்த நகலை வழங்கியது நாங்கள்தான். ஆனால் கையெழுத்து போடச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்று விளக்கமளித்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதிகூறுகையில், ``பள்ளியில் இருக்கும்போது மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனம்தான் முழுப்பொறுப்பு. இப்படி கையெழுத்து வாங்குவதெல்லாம் எந்த விதிகளிலும் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடிதம் கேட்கும் பள்ளியின் மீது கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்க கோவை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in