முடிவுக்கு வருகிறதா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி?

முடிவுக்கு வருகிறதா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கும் நிலையில், அந்தக் கூட்டணியின் நிலை என்ன, மம்தாவின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் தலைமை மவுனம் காப்பது ஏன் எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

மூன்று நாள் பயணமாக மகாராஷ்டிர மாநிலத்துக்குச் சென்றிருக்கும் மம்தா, நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், சரத் பவாருடன் இணைந்து செய்தியாளர்களை எதிர்கொண்ட மம்தா பேசிய வார்த்தைகள் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. “நாட்டில் நிலவும் பாசிஸத்தை எதிர்கொள்ள ஒரு வலுவான மாற்று தேவை” என்று சொன்ன அவர், “மூத்த தலைவரான சரத் பவார் என்ன சொன்னார் தெரியுமா? எதிர்த்துப் போராடுகின்ற மாற்று சக்திதான் தேவை என்று சொன்னார். யாரேனும் எதிர்த்துப் போராடவில்லை என்றால் நாம் என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எங்கே இருக்கிறது? அது எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது” என்றும் கூறினார்.

ஆனால், “காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு பாஜகவை எதிர்கொள்வது என்பது ஒரு கனவாகத்தான் இருக்க முடியும். இதுதான் அரசியலின் நிதர்சனம்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலடி கொடுத்தார். பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியிலும் பங்கு வகிக்கிறது. தமிழகத்திலும் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸை முற்றாகத் தவிர்த்துவிட்டு பாஜகவை எதிர்கொள்வது சாத்தியமா எனும் கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பாஜக, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த கடும் நெருக்கடிகளையும் தாண்டி வெற்றி பெற்றிருப்பது மம்தாவுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. எனினும், அந்த அதீத நம்பிக்கையில் அவர் செயல்படுவதாகக் காங்கிரஸார் கருதுகின்றனர். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதாக மம்தா சொன்னாலும், அவர் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சிதைக்கிறார் என்றே காங்கிரஸார் விமர்சிக்கிறார்கள்.

இவ்விஷயத்தில் சரத் பவார் நிதானமாகத்தான் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சியை மம்தா மறைமுகமாக வாரினாலும், அருகில் நின்ற சரத் பவார், “தலைமை ஒரு பிரச்சினை இல்லை. மக்களின் நம்பிக்கையைப் பெறும் மாற்று சக்தி உருவாக வேண்டும்” என்று பொதுவாகச் சொல்லி சமாளித்தார்.

ஐ.மு கூட்டணி வரலாறு

2004 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் உருவானது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 138 இடங்களில் வென்றிருந்த நிலையில், 145 இடங்களில் மட்டும் வென்றிருந்த காங்கிரஸ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை அமைத்துத்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எனும் பெயரைப் பரிந்துரைத்தது மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான். திமுக, பாமக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி, இடதுசாரிகள், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஒருகட்டத்தில், தெலங்கானா தனிமாநிலக் கோரிக்கையை முன்வைத்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி இக்கூட்டணியிலிருந்து விலகியது. அடுத்து, ஆட்சியில் பங்கு ஏற்காமல் பிரச்சினைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த மதிமுக, தமிழக அரசியலில் திமுகவுடன் ஏற்பட்ட முரண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாகத் தனது ஆதரவை விலக்கிக்கொண்டது.

அதன் பின்னர், 2008-ல் அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்வதைக் கண்டித்து இடதுசாரிகள் வெளியேறினர். இப்படிப் பல கட்சிகள் வெளியேறினாலும், அதன் பிறகு, 2009 தேர்தலில் மொத்தம் 262 இடங்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்றது. அதில், 206 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 2009 தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அமைந்த கூட்டணி ஆட்சியில், திரிணமூல் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. 2012-ல் திரிணமூல் காங்கிரஸும் திமுகவும் கூட்டணியிலிருந்து விலகின. திமுக வெளியேற, இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்த எதிர்ப்புணர்வு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கையில் ஏற்பட்ட மாறுபாட்டால், கூட்டணியிலிருந்து விலக மம்தா முடிவெடுத்தார்.

அதன் பின்னர் காங்கிரஸுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையில் உறவும் இல்லை, பகையும் இல்லை எனும் நிலை இருந்தது. ஆனால், மம்தாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்துவந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், இரு கட்சிகளுக்கும் இடையில் கசப்புணர்வு பரவியது. தற்போது கோவா, திரிபுரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் தாவிக்கொண்டிருப்பது காங்கிரஸைக் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் மம்தாவின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

இனி என்ன ஆகும்?

பிஹாரில், ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதையெல்லாம் தாண்டி, தங்களது தலைமையில் ஆர்ஜேடிக்கு நம்பிக்கை இருக்கிறது என்றே காங்கிரஸார் நம்புகிறார்கள். அதேபோல், 2017 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸிடமிருந்து ஒதுங்கியிருக்கும் சமாஜ்வாதி கட்சி, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால், காங்கிரஸுடன் கைகோக்கும் எனக் கருதப்படுகிறது. எனவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அத்தனை எளிதில் கரைந்துவிடாது என்றே கருதப்படுகிறது.

மம்தா இப்படிப் பேசுவதற்கு, காங்கிரஸின் 2-ம் கட்டத் தலைவர்களிடமிருந்து சீற்றங்கள் வந்தாலும் கட்சியின் தலைமை அமைதி காக்கிறது. அரசியலில் அடுத்தடுத்து நிகழும் மாற்றங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் எனும் எண்ணமே, வெளிப்படையான பதிலடிகளிலிருந்து காங்கிரஸ் தலைமையை விலக்கிவைத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Related Stories

No stories found.