விலகும் மாநிலக் கட்சிகள்: தேயத் தொடங்குகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

விலகும் மாநிலக் கட்சிகள்: தேயத் தொடங்குகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (என்டிஏ) இரண்டாவது முறையாக வெளியேறியிருக்கிறார் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார். இவரது ஐக்கிய ஜனதா தளம் போல், பல சிறிய, பெரிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இருந்தன. அப்போது முதல் பாஜக நாட்டின் பல மாநிலங்களில் வளர்ந்துள்ளது. அதேசமயம், அக்கட்சி தலைமையிலான என்டிஏ சுருங்கத் தொடங்கிவிட்டது.

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருந்தது என்டிஏ. அப்போது இக்கூட்டணியுடன் இருந்த கட்சிகள் எண்ணிக்கை 24. தேர்தல் நெருங்கும்போது இக்கூட்டணியின் பிரதமர் வேட்பளராக அறிவிக்கப்பட்டார் குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி. இதை எதிர்த்த நிதீஷ் குமார் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அந்த வகையில் என்டிஏ-வின் விரிசலுக்கு முதல் காரணமானார். எனினும், 23 கட்சிகளுடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட என்டிஏ மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பின்னர் நடந்த ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அம்மாநிலத்தின் குல்தீப் பிஷ்னோயின் ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ் என்டிஏ கூட்டணியிலிருந்து கிளம்பியது. பிராந்தியக் கட்சிகளில் பிளவை ஏற்படுத்த பாஜக முயல்வதாக குல்தீப் புகார் தெரிவித்திருந்தார் (பின்னாட்களில் அவரே பாஜகவில் இணைந்தது தனிக்கதை!)

2016-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் என்டிஏ-விலிருந்து வெளியேறியது. தமிழர்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக அந்த விலகலுக்குக் காரணம் சொன்னார் வைகோ. அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் என்டிஏ-விடமிருந்து பாமகவும் விலகியது. அதிமுகவுடன் மட்டும் தமிழகத்தில் கூட்டணி என்ற நிலை என்டிஏ-வுக்கு ஏற்பட்டது.

அடுத்த இரண்டு வருடங்களும் என்டிஏவி-லிருந்து பல சிறிய கட்சிகளின் வெளியேறலும் தொடர்ந்தன. இதில், ஜன் சேனா கட்சி, கேரளாவின் கேரள சோஷலிஸ்ட் கட்சி, பழங்குடிகளின் தலைவரான சி.கே.ஜானுவின் ஜனாதிபத்யா ராஷ்டிரிய சபா மற்றும் சுவபிமான் பக்‌ஷா ஆகியவை இடம்பெற்றன. அடுத்து வடகிழக்கு மாநிலக் கட்சிகள் வெளியேறத் தொடங்கின.

நாகாலாந்தில் 15 வருடங்களாகக் கூட்டணியில் அங்கம் வகித்த நாகா மக்கள் கட்சி என்டிஏ-வைக் கைவிட்டது. இக்கட்சி, நாகாலாந்தில் தேசிய ஜனநாயகப் புரட்சிக் கட்சி அமைத்த ஆட்சியுடன் இணைந்தது. இவ்விரண்டு கட்சிகள் மீண்டும் என்டிஏ-வுடன் இணைந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் குர்கா ஜன் முக்தி மோர்ச்சாவும் என்டிஏவி-லிருந்து விலகியது.

ஆந்திர மாநிலத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் என்டிஏவின் வெற்றிக்கு தீவிரமாகப் பாடுபட்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் 2018-ல் வெளியேறியது. ஆந்திராவிற்குத் தனி அந்தஸ்து அளிக்கப்படாததுதான் விலகலுக்குக் காரணம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தின் பிரக்யாநவந்தா ஜனதா கட்சியும் என்டிஏ-வுடனான உறவை முறித்துக்கொண்டது. இதே வருடம் காஷ்மீரில். மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் விலகியது.

இப்பட்டியலில் பிஹாரின் கட்சிகள் மீண்டும் விலகத் தொடங்கின. கடந்த 2018 டிசம்பரில் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி விலகியது. பின்னர் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி வெளியேறியது. இவை மீண்டும் 2020 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் என்டிஏ-வில் இணைந்தன. 2019-ல் இந்த விலகல் பட்டியல் அதிகரித்தது. மகராஷ்டிராவின் சிவசேனா, பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தாந்திரிக் கட்சி ஆகியவை என்டிஏ-விலிருந்து வெளியேறின.

தற்போது என்டிஏ-வில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இவற்றில், சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்தவர்களின் கட்சி, அத்தாவாலேயின் இந்திய குடியரசுக் கட்சி, அசாம் கன பரிஷத், லோக் ஜன சக்தி, அப்னா தளம்(சோனூலால்), என்பிபி, என்டிபிபி, எஸ்கேஎம், எம்என்எப், என்பிஎப், யுபிபிஎல், ஏஜேஎஸ்யு, ஏஜேஏஎஸ்யு, எஐஎன்ஆர்சி ஆகியவை உள்ளன. இக்கட்சிகளில் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவை அதிகம். இன்றைய தேதியில் தமிழகத்தில் அதிமுக, பாமக, தமிழ் மாநிலக் காங்கிரஸ், புரட்சி பாரதம் ஆகியவை மட்டுமே என்டிஏ-வுடன் உள்ளன.

கடந்த எட்டு வருடங்களில் பாஜக ஒரு தனிக்கட்சியாக பல மாநிலங்களில் ஆட்சி அமைத்து உறுதி பெற்றுள்ளது. அதேசமயம், இந்த உறுதிபெறக் காரணமான அக்கட்சி தலைமையிலான என்டிஏ வலுவிழந்துகொண்டிருப்பது நிதர்சனம்.

பாஜகவைப் பொறுத்தவரை வருங்காலங்களில் தனித்து இருக்க வேண்டிய நிலை அல்லது மிகக் குறைந்த கட்சிகளுடன் கூட்டணி என அரசியல் செய்ய வேண்டியிருக்கும். இதன் எதிர்கால சவாலாக இருப்பது வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தல். இதிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உறுதியாகக் கருதப்பட்ட வெற்றி, நிதீஷ் குமாரால் கேள்விக்குறியாகிவிட்டது. இந்த வாய்ப்பையாவது எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளுமா என்று பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in